கர்த்தர் உங்களுக்கு அனுகூலமாயிருப்பார் (God will show you rich favor and grace)

உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும், அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன் (சங். 119:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QyCnofe9MLM

கர்த்தர் கிருபையாய் ஒரு புதிய மாதத்திற்குள்ளாய் நம்மை அழைத்துக் கொண்டு வந்தார். சங்கீதக்காரனைப் போல, ஆண்டவரே உமது அடியானாகிய எனக்கு உம்முடைய தயையையும், கிருபையையும் வெளிப்படுத்தி, அனுகூலமாயிரும் என்று வேண்டுதல் செய்யுங்கள். அப்போது, கர்த்தர் தம்முடைய தயையை உங்களுக்கு வெளிப்படுத்தி, புதிய மாதம் முழுவதும் உங்களை ஜெயமாக நடத்துவார், நீங்கள் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள். யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா, அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை,  அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான், ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார், அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று என்று வேதம் கூறுகிறது. அவனைப் போல, கர்த்தரை உண்மையாய் சேவிக்கிற உங்களுக்கும் கர்த்தர் அனுகூலமான வாசலைத் திறப்பார். உங்களுக்கு முன்பாகத் தடைகளை நீக்கிப் போடுகிறவராய் அவர் நடந்து செல்வார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, சங்கீதக்காரன் உமது அடியேன், அதாவது உமது அடிமை  என்று தன்னைத் தாழ்த்துகிறதைப் பார்க்கமுடிகிறது. அடிமை என்பவன் தன்னை முழுவதுமாய் எஜமானுடைய கரத்தில் தன்னுடைய தேவைகளுக்காக, அடைக்கலத்திற்காக, பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கிறவன். சுயமாய் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. கர்த்தர் தாழ்மையுள்ளவர்களை நோக்கிப் பார்க்கிறவர். பெருமையுள்ளவர்களுக்கு அவர் எதிர்த்து நிற்கிறார். தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான் என்பது அவருடைய வாக்குத்தத்தம். அவனைப் போல நீங்களும் உங்களைத் தாழ்த்தும் போது, கர்த்தருடைய தாராளமான, நிறைவான, முழுமையான நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள். 

கர்த்தர் உங்களுக்கு அனுகூலமாயிருந்து, ஆசீர்வதித்து நடத்தும்போது, நீங்கள் பிழைத்திருந்து அவருடைய வசனத்தைக் கைக்கொண்டு வாழுங்கள். அவருடைய வசனத்தை வாசிப்பதும் கேட்பதும் நல்லது, அதைக்காட்டிலும் மேலானது அதைக் கைக்கொண்டு வாழ்வது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் சுயவிருப்பத்தின்படி வாழ்வதற்காய் அல்ல, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சத்தியத்தின் பாதையில், உண்மையாய் காணப்படுவதற்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அனேகர் கர்த்தருடைய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றபின்பு, தங்கள் விருப்பம் போல வாழ்ந்து, ஆண்டவர் பேரில் கொண்டிருந்த அன்பையும் விட்டுவிடுகிறார்கள். ஆகையால், கர்த்தர் உங்களுக்கு அனுகூலமாயிருந்து, ஆசீர்வதித்து உயர்த்தும் போது, நீங்கள் இன்னும் அவரை சேவிப்பதற்கு உங்களைப் பூரணமாய் ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae