மத் 27:29,30 முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5XrC-iEUfOY
கிரீடம் என்பது ராஜாக்கள் தங்கள் அதிகாரம் மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக அணியும் தலை அலங்காரம் அல்லது பாரம்பரிய வடிவமாகும். கிரீடம் என்பது பெரும்பாலும், ராஜாவின் அரசாங்கம் அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களின் சின்னமாய் காணப்படும். சில ராஜாக்களின் கிரீடம் தங்கத்தினாலும், விலையுயர்ந்த முத்துக்களினாலும் செய்யப்பட்டிருக்கும். இந்நாட்களில் சில மத குருக்கள் கூட தங்கள் தலையில் கிரீடத்தை அணிந்துகொள்ளுகிறார்கள். ஆனால், நம்முடைய இராஜாதி இராஜாவின் தலையில் முள்முடியினால் செய்யப்பட்ட கிரீடத்தை, ரோம போர்சேவகர்கள் தரிப்பித்தார்கள். அவரை யூதருடைய ராஜா என்று இகழ்ந்தார்கள்.
முள் என்பது சாபத்திற்கு அடையாளமான ஒரு பொருள். நம்முடைய சாபத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். தலைமுறை சாபம், சம்பாதித்த சாபம், மற்றவர்களிட்ட சாபம், நியாயப்பிரமாணத்தின் சாபம், இவைகளெல்லாவற்றையும் கிறிஸ்து ஏற்றுக்கொண்டார். சாபம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடும், சாபம் சரீரத்தில் வியாதியை கொண்டு வரும், சாபம் வீட்டில் பல உயிரிழப்புகளை கொண்டு வரும், சாபமுள்ள வாழ்க்கையில் சமாதானம் இருப்பதில்லை, சந்தோசம் காணப்படுவதில்லை. ஒரு குடும்பத்தார் சொன்னார்கள், எங்கள் குடும்பத்தில் உள்ள அநேக வீடுகளில், தலைப்பிள்ளைகள் பதினைந்து வயதை தாண்டுவதில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் மரித்துவிடுவார்கள் என்பதாக. இது ஒருவகையான சாபம். மற்றொரு குடும்பத்தார் சொன்னார்கள், அவர்களுக்கு பிறந்த நான்கு குமாரத்திகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்; சில வருடங்களுக்குள்ளாகவே, எல்லா குமாரத்திகளின் கணவர்களும் மரித்துவிட்டார்கள் என்பதாக. இது ஒருவகையான சாபம். இப்படியாக பாவத்தின் விளைவாகவும், தலைமுறைகளின் பாவத்தினாலும், பின்தொடருகிற சாபங்கள் அநேகரை வாட்டிவதைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சாபத்தின் பிடியிலிருக்கும் ஜனங்களை விடுவிக்கதற்காகவே, இயேசு ராஜாவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டது.
முள்முடிசூட்டப்பட்ட இயேசுவின் தலையை நோக்கி பாருங்கள். இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள், ஒருவகையான விசமிக்க முள். ஒரு முள் தைக்கும்போது, ஒரு தேள் கொட்டுவதற்கு சமமான வேதனை வரும். அந்த முள்ளானது மிகவும் நீளமானதாக இருந்ததால், இயேசுவின் கண்களின் வழியாக வரும் அளவிற்கு அந்த முள்கள் தலையை பிய்த்துகொண்டுபோனது. இவைகளையெல்லாம் இயேசு எதற்காக ஏற்றுகொண்டாரென்றால், நம்முடைய தலைமுறை சாபங்கள், மனிதர்களிட்ட சாபங்கள் எதுவும் வாழ்க்கையில் கிரியை செய்யாதபடிக்கு தடுத்து நிறுத்தவும், நீங்கள் சுகமுள்ள வாழ்க்கை வாழும்படியாகவும் மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது உங்களை எந்த ஒரு சாபம் தொடரமுடியாது. இயேசு எல்லா சாபங்களையும் நீக்கிப்போட்டார் என்பதை விசுவாசியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org