நீங்கள் பயப்படும்போது கர்த்தரை நம்புங்கள் (When you fear, trust in God).

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங். 56:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cEKYlqN-dd0

தாவீதின் எதிரிகளாகிய பெலிஸ்தியர்கள் காத்தூரிலே தாவீதைப் பிடித்த வேளையில் எழுதப்பட்ட சங்கீதம் என்று இந்த சங்கீதத்தின் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது.  தாவீது   சவுலுக்குத் தப்பியோடி,     காத்தின் ராஜாவாகிய  ஆகீசிடத்தில் போனான்.  ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து,     தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம்,     தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். உடனே தாவீது,     காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,      அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி,     ஒரு பயித்தியக்காரனைப் போல வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து,     தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான். பயத்தின் நடுவில் பாடின சங்கீதத்தில்,     நான் பயப்படும் போது கர்த்தரை நம்புவேன் என்றான். சிங்கத்தையும் கரடியையும் ஆட்டுக்குட்டியைப் போலக் கிழித்துக் கொன்றவன்,     ஒருவனாய் நின்று கோலியாத்தை  வீழ்த்தினவன்,      ஆகீசுக்கு முன்பாக மிகவும் பயந்தான். எவ்வளவு பெரிய பரிசுத்தவான்களாய்,     பராக்கிரமசாலிகளாய் காணப்பட்டாலும் பயப்படுகிற வேளைகள் வாழ்க்கையில் வரத்தான் செய்யும். எலியா யேசபேலுக்கு பயந்து பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய்  சூரைச்செடியின் கீழ் படுத்தக் கொண்டு போதும் என் ஆண்டவரே என் உயிரை எடுத்துக் கொள்ளும் என்றான்.  யோசபாத் ராஜா அவனுக்கு எதிராக  வந்த ராஜாக்களைக் கண்டு பயந்து,     எங்களுக்குப் பெலனில்லை,     என்ன செய்ய வேண்டும் என்பதையறிய ஞானமுமில்லை,     எங்கள் கண்கள் உம்மை நோக்குகிறது என்றான்.  

கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் வாழ்க்கையில் பயங்கள் வரும் போது உங்கள் நம்பிக்கையைக் கர்த்தர் பேரில் வையுங்கள். பயம் உங்களை முடக்கிப் போடாதபடி,     விசுவாச வாழ்க்கையில் சுணக்கம் ஏற்படுத்தாதபடிக்கு,     சூரைச் செடியின் அனுபவத்திற்கு நேராய் உங்களை அழைத்துக் கொண்டு சென்று விடாதபடிக்கு கவனமாய் காணப்படுங்கள். தேசங்களில் நடக்கிற சம்பவங்கள் நம்மைப் பயப்படுத்துகிறது. எப்பொழுது உலக யுத்தங்கள் வரும் என்பதை நாம் அறியாதவர்களாய் காணப்படுகிறோம். உலகெங்கும்  பரவிக் காணப்படுகிற பாவப் பழக்கங்கள் நம்முடைய பிள்ளைகளையும் பிடித்து விடுமோ என்ற பயங்கள் காணப்படுகிறது. சபைகளில் நடக்கிற சம்பவங்களையும்,     ஆவிக்குரிய வீழ்ச்சிகளையும் பார்க்கும் போது சபைகளை நேசிக்கிறவர்களுக்குள் கலக்கமும் திகிலும் காணப்படுகிறது. கர்த்தருடைய வருகை மட்டும் விசுவாசிகள் தங்கள் விசுவாச வாழ்க்கையில் நிலைநிற்பார்களா? என்ற பயங்கள் வருகிறது. 
வேலைகளை குறித்தும்,  எதிர்காலங்களைக் குறித்த பயங்கள், கலக்கங்களை ஏற்படுத்துகிற வேளைகள் உண்டு.  இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளில்,     நம்முடைய முழு நம்பிக்கை கர்த்தர் பேரில் காணட்டும்.    கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரையே தன் நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது. உங்கள் நம்பிக்கை இயேசுவின் மேல் காணப்படும் போது,     அந்த நம்பிக்கை ஒருநாளும் உங்களை வெட்கப்படுத்தாது,     உங்கள் தடைகளைத் தாண்டிச் செல்லுவீர்கள்,     உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae