கர்த்தர் மீது உங்கள் அன்பை வையுங்கள் (Set your love upon God)

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் (சங். 91:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_KtJzo9CHUs

கர்த்தர் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறார். அவர் பேதுருவைப் பார்த்து என்மேல் அன்பாயிருக்கிறாயா என்று கேட்டார். மரியாள் ஆண்டவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவருடைய  பாதங்களில் பரிமளதைலம் பூசி, பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்த வேளையில், இவள் என்னிடத்தில் மிகவும் அன்பு கூர்ந்தாள் என்று இயேசு அவளைப் புகழுவதற்கு மறக்கவில்லை. ஆண்டவரிடத்தில் அன்பு கூருகிறவர்கள் அவரோடு நேரத்தைச் செலவழிப்பார்கள், அவருடைய வார்த்தைகளை வாசித்துத் தியானிப்பார்கள், அவருடைய சத்தத்திற்குச் செவியைச் சாய்ப்பார்கள், அவரோடு ஜெபத்திலே பேசுகிறவர்களாய் காணப்படுவார்கள். ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம் என்று இயேசு யேவான் 14:23ல் கூறினார்.

ஆண்டவரிடத்தில் அன்பு கூருகிற உங்களுக்குக் கர்த்தர் வைத்திருக்கிற சில ஆசீர்வாதங்களை சங்.91:14-16ல் வாசிக்க முடிகிறது. உங்கள் ஆபத்து வேளையில் உங்களை விடுவிப்பேன் என்று ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார். இந்நாட்களில் ஆபத்துகள் எப்படிச் சம்பவிக்கிறது என்பதைக் கூட யூகிக்கமுடியவில்லை. சமாதானமாய் காணப்படுகிற தேசங்களில் யுத்தங்கள் திடீரென்று வருகிறது. சந்தோஷத்தோடு காணப்படுகிறவர்களை விபத்துகள் சடுதியில் சந்தித்து முடக்கிவிடுகிறது. யாத்திரைகளில்  பயங்களும் திகில்களும் காணப்படுகிறது. ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் அன்பை ஆண்டவர் பேரில் வைக்கும் போது, கர்த்தர் உங்களை விடுவிப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறார். சத்துருவின் சகல கண்ணிகளுக்கும் கர்த்தர் உங்களைத் தப்புவிப்பார். அதுபோல, அவருடைய நாமத்தை நீங்கள் அறிந்து, அவரில் அன்பு கூர்ந்து, அவரை சேவிக்கிறவர்களாய்  காணப்படுவதினால் உங்களை எட்டாத உயரத்தில் வைத்துப் பாதுகாப்பேன் என்றும் வாக்குக் கொடுக்கிறார். அவர் உங்களை எட்டாத உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும் போது எந்த தீயோனுடைய அம்புகளும் உங்களைத் தொடமுடியாது. நீங்கள் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது, கர்த்தர் உங்களுக்குப் பதில் கொடுத்து உங்களை எல்லா இக்கட்டுகளுக்கும்  தப்புவித்துக் கனப்படுத்துவார். உங்களுக்கு நீடிய ஆயுளைத் தந்து திருப்தியாய் ஆசீர்வதித்து வாழவைப்பார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் ஆண்டவரில் அன்பு கூர்ந்து அவரை சேவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது ஆண்டவர் உங்களைக் கண்ணின் மணிபோல பாதுகாத்து, கனப்படுத்தி, உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae