கர்த்தர் தாவீதைக் காப்பாற்றினார் (The Lord preserved David)

தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான், சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங் கட்டினார்கள். தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்(2 சாமு. 8:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yMjrN6K1ZTM

தாவீது ஒரு யுத்தப் புருஷன். யூத பாரம்பரியங்கள் அவன் சுமார் அறுபத்தாறு யுத்தங்களைச் செய்தான் என்று சற்று மிகைப்படுத்திக் கூறினாலும், வேதத்தின்படி அவன் அனேக யுத்தங்களைச் செய்தான் என்பதைப்   புரிந்துகொள்ளமுடிகிறது. ஒரு யுத்தத்தில் கூட அவன் தோற்கவில்லை. கோலியாத்தோடு அவன் துவங்கின யுத்தத்திலிருந்து, அவனும் அவனுடைய இராணுவமும் செய்த எல்லா யுத்தங்களிலும் அவன் ஜெயிக்கிறவனாய் காணப்பட்டான். சவுலின் குடும்பத்துக்கும்  தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவரப் பலத்தான். சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள் என்று 2 சாமு. 3:1 கூறுகிறது. அதற்குக் காரணம் சேனைகளின் கர்த்தர் அவனோடிருந்து அவனைக் காப்பாற்றினார். வல்லரசு நாடாய் காணப்படுகிற அமெரிக்கா கூட, வியட்நாம் யுத்தத்தில் தோற்றுப் போனது. ஆகையால் கர்த்தர் உடனிராவிட்டால் எல்லா யுத்தங்களையும் ஜெயிப்பது கூடாத காரியம்.

கர்த்தருடைய பிள்ளைகளே, வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் யுத்தக் களத்தில் நிற்பதைப் போன்றதாய் காணப்படுகிறது. யோசுவா  முப்பத்தியொன்று ராஜாக்களை மேற்கொண்டு கானானை  இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பங்கிட்டான் என்பதப் போல, நாமும் ஒவ்வொரு நாளும் சத்துருவை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒப்புமையாகக்   காணப்படுகிறது. காணக்கூடாத வல்லமைகள் நமக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறது, சத்துருவால் ஏவப்பட்ட ஜனங்கள் நமக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுவார்கள். மறைவான கண்ணிகள் நமக்கு முன்பாக வைக்கப்படுகிறது. ஆகையால்தான்,  எபேசு சபை விசுவாசிகளுக்கு பவுல் சிறைச்சாலையிலிருந்து எழுதும் போது, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.  நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்  தரித்துக்கொள்ளுங்கள்.  ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று எழுதினான். தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களை நாம்   தரித்தவர்களாகவும், எடுத்தவர்களாகவும்  காணப்படும் போது, இராணுவங்களின் தேவன் நமக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது அனேக ஐரோப்பிய நாடுகள் ஆயத்தம் இல்லாதவையாய் காணப்பட்டதினால் ஹிட்லர் அவைகளை  எளிதாக மேற்கொண்டான்.   பவுல் விசுவாசத்தில் தனக்கு உத்தம குமாரனாய் காணப்பட்ட தீமோத்தேயுவிடம் கிறிஸ்து இயேசுவுக்கு நல்ல போர் சேவகனாய் காணப்படு என்று கூறியதைப் போல,  கர்த்தருடைய பிள்ளைகள் ஒரு போர்வீரனைப் போல எப்பொழுதும் யுத்த நிலையில் ஆயத்தமாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து, அவருக்குச் சித்தமானவற்றைச் செய்து, அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாய் காணப்படும் போது, கர்த்தர் உங்களை அனுதினமும் காப்பாற்றி நடத்துவார், உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae