2 நாளா 24:4,5 அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uqXyz0my_gA
தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்த வேலைகளில் நாம் தாமதம் இல்லாமல் உடனடியாகச் செய்ய நம்முடைய உடலையும், இருதயத்தையும் பக்குவப்படுத்த வேண்டும். சாத்தான் எவ்வளவு சீக்கிரமாகவும் துரிதமாகவும் வேலை செய்கிறான் என்று பாருங்கள். தேவன் எப்பொழுது ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் படைத்தாரோ, சாத்தான் கொஞ்சமும் தாமதிக்காமல் சர்ப்பத்தின் தோற்றத்தில் வந்து மனுக்குலத்தை வஞ்சித்துவிட்டான். இன்றைக்கு தேவனுக்கடுத்த காரியங்களில் தாமதப்படுத்தும் விசுவாசிகளே அநேகராய் இருக்கிறார்கள்.
ஆபிரகாமை ஆண்டவர் பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரிக்க அவனுடைய தகப்பனாகிய தேராகுவிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் ஆபிரகாம் தேவனுடைய சத்தத்திற்கு தன்னைத் தாமதப்படுத்த்தினான். தேராகு என்றால் தாமதம் என்று அர்த்தம்; அதாவது ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது தான் தாமதமாய் காணப்படுகிறது. நாள் முழுவதும் நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டும், உல்லாசமாகச் சுற்றிக்கொண்டும், சமூகவலைத்தளங்களில் நேரத்தை வீணடித்தும், கடினமாக வேலை பார்த்து, நாளின் முடிவில் வந்து ‘ஆண்டவரே நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன், என் உடல் முழுவதும் வலிக்கிறது, ஆகையால் இன்றைக்கு நான் பண்ணவேண்டிய ஜெபத்தையும், வேதவாசிப்பையும் நாளைக்குச் செய்கிறேன்’ என்று தள்ளிப்போடுகிறீர்கள் பாருங்கள், அதுதான் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தேராகு என்கிற தாமதம்.
யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை புதுப்பிக்க வேண்டும், அதைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்று கூறியபிறகும், அதைச் செய்வதற்கு லேவியர்கள் தாமதப்படுத்தினார்கள். நாம் விவேகமாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் துரிதமாகவும் இருக்க வேண்டும். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்று எபேசியர் 5:16, 17 கூறுகிறது. யோவாஸ் மிகச்சிறிய வயதில் ராஜாவாகப் பொறுப்பேற்றவன். அவன் ராஜாவாகப் பொறுப்பேற்றபோது அவனுக்கு வயது வெறும் 7 தான். இருந்தாலும் அவனுக்குள்ளிருந்த உத்வேகத்தைப் பாருங்கள்.
கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் சபைக்குத் தாமதமாக வருவது, தேவனுக்கடுத்த காரியங்களில் அசால்ட்டாக இருப்பது போன்ற காரியங்களின் விளைவை அறிந்து துரிதமாகச் செயல்படுகிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும். நமக்குள்ளிருக்கும் சோம்பல், சும்மா இருத்தல் போன்ற சுபாவங்கள் மாற வேண்டும். இயேசு சொன்னார், ‘பகற்காலமிருக்கும்மட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது’ (யோவா 9:4) என்று தான் சீக்கிரம் செய்யவேண்டிய வேலையைக் கூறுகிறார். மாத்திரமல்ல, வெளி 22:20-ல் ‘நான் தாமதமாக வருவேன்’ என்று ஆண்டவர் சொல்லவில்லை, ‘நான் சீக்கிரம் வருகிறேன்’ என்றே கூறினார். ஆகையால் நமக்கு முன்பாக இருக்கும் தேவனுடைய பணிகளைத் துரிதமாகச் செய்ய முன்வருவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

