முகமும் இருதயமும் (Face and Heart)

நெகே 2 : 2 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dcDJhrOu9BU

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி சொல்லுவார்கள். ஞானி சாலொமோன், “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனத்துக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்” (நீதி 15:13) என்று கூறுகிறார். இதயத்திற்கும் முகத்திற்கும் இடையே மிகுந்த தொடர்பு உள்ளது என்று மேற்குறிப்பிட்ட வசனங்கள் கூறுகின்றன. பல நேரங்களில், ஒருவருடைய முகபாவனையைக் கொண்டே அவருடைய இதயத்தின் உணர்வுகளை நம்மால் கண்டுபிடிக்க முடியும். தேவன் காயீனிடம், “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” என்று கேட்ட காலத்திலிருந்தே இது உண்மையாக இருந்து வருகிறது. சோர்வும் மன அழுத்தமும் இருக்கும்போது, நம்முடைய முகம் வாடிவிடுகிறது. ஒருவர் நம்மை ஏளனமாகப் பேசும்போதும், தரக்குறைவாகப் பேசும்போதும் நம்முடைய முகம் வாடிவிடுகிறது. மற்றொருவர் நம்மை உயர்த்தியும் புகழ்ந்தும் பேசும்போது நம்முடைய முகம் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சியான இதயம் ஒரு கலகலப்பான முகத்தை உருவாக்குகிறது. அதற்காக எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. மகிழ்ச்சியான இதயம் என்பது பணத்திலோ, கௌரவத்திலோ, அல்லது உலக இன்பங்களிலோ தன் மகிழ்ச்சியைக் கண்டடையாமல், கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைவதாகும்.

அலங்கம் இடிக்கப்பட்டதை அறிந்து நெகேமியாவினுடைய இருதயமும் உடைந்துபோனது. இருதயத்தில் அவனுக்கு வந்த பாரம் அவன் முகத்தில் தெரிந்தது. பலர் இருதயத்தில் வரும் பாரங்களை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சிப்பார்கள்; ஆனால் அது எப்போதும் அப்படி இருக்க முடியாது. உலகத்தில் சபை இடிக்கப்படுகிற செய்தியையோ, அலங்கம் இடிக்கப்படுகிற செய்தியையோ கேட்கும்போது நம்முடைய இருதயம் பாரப்படாமலும், அதன் விளைவாக நம்முடைய முகம் துக்கமாக இல்லாமல் இருந்தால், நாம் தேவனுடைய பாரத்தைச் சுமந்துசெல்லுகிற தேவனுக்குப் பங்குதாரராக இல்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய முகம் முகமலர்ச்சியோடு தான் இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அதேவேளையில் எங்கெல்லாம் சபை தாக்கப்படுகிறதோ, உடைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய இருதயமும் பாரப்பட வேண்டும்.

அர்தசஷ்டா ராஜா நெகேமியாவின் முகம் வாடி இருந்ததை பார்த்து கண்டும் காணாதவன் போல இருக்கவில்லை. நெகேமியாவிற்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அறிந்தும், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க ராஜா முன்வந்ததையும் பார்க்கிறோம். அந்த ராஜா பார்க்கிறவண்ணம் நாமும் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். மற்றவர்களுடைய முகம் வாடி இருக்கும்போது, அவர்கள் உள்ளம் உடைந்துபோயிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வீண் நகைச்சுவை செய்பவர்களாக நாம் காணப்படக்கூடாது. சந்தோஷப்படுகிறவர்களோடே நாம் சந்தோஷப்படவும், துக்கப்படுகிறவர்களோடே துக்கப்படவும் வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் சபைக்கு ஆபத்து வரும்போது பாரப்படுங்கள் , மற்றபடி மனமகிழ்ச்சி உங்களுக்கு முகமலர்ச்சியை கொடுக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org