கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை (Nothing is hidden from the Lord)

நீதி 15 : 11 பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fIfF3wqEjXM

மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது, நரகமும் பாதாளமும் கூட கர்த்தருக்கு முன்பாக நிர்வாணமாக, அதாவது கொஞ்சம்கூட மறைவில்லாமல் இருக்கிறது. ஒரு வீட்டின் கதவு திறந்திருப்பதைப் போலவே அவர் அதைப் பார்க்கிறார். நாம் பாதாளத்தை பார்ப்பதில்லை, அது எங்கே இருக்கிறது என்று கூட நமக்குத் தெரியாது, ஆனால் தேவனுக்கு முன்பாக எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. யோபு பக்தன் சொல்லுகிறான், ‘அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது’ (யோபு 26:6) என்பதாக. சங்கீதக்காரன் சொல்லுகிறான், ‘நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்’ (சங் 139:8) என்பதாக. அப்படியென்றால், நரகமே தேவனுக்கு முன்பாகத் வெளிப்படையாகத் திறந்திருக்கிறது என்றால், மனிதனின் இருதயங்கள் எவ்வளவு அதிகமாக அவருக்குத் தெரியும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர் மனிதனின் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர், மனிதனின் யோசனைகளின் இருப்பிடத்தையும் அறிந்தவர்.

இது ஏதோ ஒரு பெரிய சத்தியம் அல்ல, இது எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்; தேவன் நம் இருதயங்களில் உள்ள அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்று அநேகர் கூறலாம். தேவன் நம் இருதயங்களில் உள்ள அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்பதை நாம் உண்மையிலேயே நம்பினால், நம்முடைய அந்தரங்க வாழ்வில் தூய்மையான வாழ்வு வாழ முயற்சி செய்வோம். காலை, மதியம், இரவு என்று எல்லா நேரங்களிலும் கர்த்தர் என் இருதயத்தை பார்க்கிறார் என்ற உணர்வு இருக்குமென்றால், இருதயம் பாவத்தினால் கறைபடாமல் இருக்க முயற்சிசெய்வோம். நம் இருதயத்தின் லட்சியங்களும் விருப்பங்களும் எண்ணங்களும் கர்த்தருக்கு முன்பாக வெளிப்படையாகவே இருக்கின்றது. நாம் ஒரு சகோதரனிடம் என்ன வார்த்தைகளைச் சொன்னாலும், அதற்குப் பின்னால் இருக்கும் மனப்பான்மைகளையும் நோக்கங்களையும் தேவன் அறிகிறார் என்ற அறிவு தேவ பிள்ளைகளுக்குக் காணப்பட வேண்டும். இதை நாம் உண்மையிலேயே நம்பினால், அது நம் அந்தரங்க வாழ்க்கையில் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

கர்த்தருக்கு முன்பாக வெளிப்படுத்தப்படாத ஒரு காரியம்கூட எந்த மூலையிலும் மறைந்திருக்கவில்லை. சபையில் உள்ள ஒவ்வொரு சகோதர சகோதரியிடமிருந்தும், ஒருவேளை சொந்த மனைவி அல்லது கணவரிடமிருந்தும் கூட ஐம்பது ஆண்டுகளாக நாம் காரியங்களை மறைக்கலாம், ஆனால் தேவன் ஒரு நொடியும் ஏமாற்றப்படுவதில்லை. அவர் எல்லாவற்றையும் ஊடுருவிப் பார்க்கிறார். ‘மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்று 1 சாமு 16:7-ல் கர்த்தர் கூறுகிறார். ஆகையால், கர்த்தர் இருதயங்களைப்ப்பார்க்கிறார் என்ற சிந்தையோடு, எல்லா காவலோடும் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அவற்றிலிருந்து ஜீவநதி மாத்திரம் புறப்பட்டு வரும்படி, உங்கள் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org