உங்கள் தகப்பன் (Your Father)

அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும்  குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் (2 கொரி. 6:18).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/08wXKzv3BJY

பிதாவாகிய தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாய் காணப்படுவது நமக்குக் கிடைத்த பாக்கியமாய் காணப்படுகிறது. அவருடைய அன்பிற்கு அளவேயில்லை, அவரிடத்திலிருந்து நன்மையான ஈவுகளும், பூரணமான   வரங்களும் உண்டாகி நம்மேல் இறங்கிவருகிறது. அவர் இயேசுவின் மேல் அன்பாயிருந்தது போல நம்மேலும்  அன்பாயிருக்கிறார்: நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும் படிக்குச் செய்யும் என்று யோவான் 17:23ல் எழுதப்பட்டிருக்கிறது. அவர் பட்சபாதமில்லாத தேவன். மூத்த குமாரன் தகப்பனுடைய அன்பைப் பட்சபாதமுள்ளதாய் பார்த்தான், இளைய குமாரன் தகப்பனுடைய அன்பைச் சந்தேகித்து ஒருவேலைக் காரனாய் தன்னை ஏற்றுக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தோடு வந்தான், ஆனால் தகப்பன் இரண்டு பேரையும் ஒன்று போல நேசிக்கிறவராய் காணப்பட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு நாளும் பரமத் தகப்பனுடைய  அன்பைச்  சந்தேகிக்காதிருங்கள். அநாதி சிநேகத்தால் உன்னைச் சினேகித்தேன், காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் என்பது அவர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. அவர் உங்கள் மேல் கொண்ட அன்பு நித்தியமானது. தந்தையர் தினத்தை நினைவு கூர்ந்து களிகூருகிற வேளையில், பரமத் தகப்பனுடைய அன்பை மறந்துவிடாதிருங்கள்.

பிதாவாகிய தேவன், யாருக்குத் தகப்பனாய் காணப்படுவார் என்பதைக் குறித்துக் கூறும் பொழுது, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள், அப்பொழுது நான் உங்களைப் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டு, உங்கள் பிதாவாயிருப்பேன் என்று   கூறுவதைக் குறித்து முந்திய வசனம், 2 கொரி. 6:17ல் எழுதப்பட்டிருக்கிறது. பிரித்தெடுக்கப்பட்ட, வேறுபாட்டின் ஜீவியம் செய்கிறவர்களுக்கு அவர் பிதாவாயிருப்பார். நாம் புறஜாதிகள் நடுவில் வாழ்ந்தாலும், அவர்களுடைய மார்க்கத்தைக் கற்று, அவர்களோடு கலந்த ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்படக் கூடாது. கிறிஸ்தவம் என்பது வேதத்தின்படி வாழ்கிற, வேறுபாட்டின் வாழ்வாய் காணப்படுகிறது. நம்மைப் போல மற்றவர்களை நேசிக்க வேண்டும், அதே வேளையில், அவர்களுடைய வழிகளைப் பின்பற்றக் கூடாது. கர்த்தருடைய ஜனங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாய்க் காணப்படுகிறீர்கள், அவர் உங்களுக்குள் உலாவி உங்கள் தேவனாகவும், தகப்பனாகவும் காணப்படுகிறார். ஆகையால் புறஜாதிகளுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றி உங்கள் ஆலயத்தைக் கெடுத்தால் அவர் உங்களுக்குள் உலாவி உங்கள் தகப்பனாய் காணப்பட முடியாது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருங்கள், நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?  ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும்  பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?  தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? இப்படிப்பட்டவர்களை விட்டு, நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்யும் போது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உங்கள் தகப்பனாய் காணப்படுவார், நீங்கள் அவருடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் காணப்படுவீர்கள். நீங்கள் ராஜாதி ராஜாவுடைய பிள்ளைகளாய் காணப்படும் போது, அவர் உங்கள் தேவைகளைச்  சந்தித்து, உங்களை ஆசீர்வாதமாய் வாழ வைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae