நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான் (எஸ்தர் 4:14).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ckWu54VeO5k
எஸ்தர் என்னும் அத்சாள் ஓர் அனாதைப் பெண்ணாய் காணப்பட்டவள். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மொர்தெகாய் அவளை வளர்த்து வந்தான். எஸ்தரும் அவன் சொல் கேட்டு ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டு வந்தாள். பின்னாட்களில் அவள் இந்தியா முதல் எத்தியோப்பியா வரைக்கும் நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட பெர்சிய ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு மனைவியாகி, அந்தத் தேசங்களுக்கெல்லாம் ராணியாகும் பாக்கியம் பெற்றாள். அவளுக்கு இந்த ராஜமேன்மை கர்த்தருடைய கிருபையினாலும் தயவினாலும் கிடைத்தது. நம்முடைய தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறவர், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறவர். அடிமையாகவும், சிறைக்கைதியாகவும் காணப்பட்ட யோசேப்பை உயர்த்தி முழு எகிப்திற்குப் பிரதம மந்திரியாக்கினார். விதவையாய் காணப்பட்ட ரூத்தை ஆசீர்வதித்து, போவாசின் மனைவியாக்கி, இயேசுவின் கொள்ளுப்பாட்டியாகும் பாக்கியத்தைக் கொடுத்தார். படிப்பறிவில்லாத மீனவர்களை தொந்தெடுத்து, சீஷர்களாக்கி, உலகத்தைக் கலக்குகிறவர்களாக மாற்றினார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். ஆகையால் உங்களுக்குக் கிடைத்திருப்பது ராஜமேன்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகில் கோடிக்கணக்கான ஜனங்கள் காணப்பட்டிருந்தும் இயேசு நம்மைத் தெரிந்தெடுத்திருப்பது நமக்குக் கிடைத்த பாக்கியமாய் காணப்படுகிறது.
எஸ்தருக்கு தேவனிடத்திலிருந்து கிடைத்த ராஜமேன்மை, அவளுடைய ஜனங்களுடைய உபத்திரவத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக என்பதை மேற்குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும் போது அறியமுடிகிறது. ஆமானின் மூலம் நூற்றிருபத்தேழு நாடுகளிலும் காணப்பட்ட யூதர்களுக்கு ஒருமித்து ஆபத்து வந்தது. எல்லோரையும் ஒரே நாளில் கொன்று ஒழிப்பதற்கு அவன் அகாஸ்வேருவிடம் அனுமதியையும் பெற்றுவிட்டான். இந்தச் செய்தியானது எஸ்தருக்கு, அவள் வளர்ப்புத் தகப்பனாகிய மொர்தெகாயின் மூலம் அறிவிக்கப்பட்டது. எஸ்தர் தெரிவு செய்வதற்கு அவளுக்கு முன்பாக இரண்டு காரியங்கள் காணப்பட்டது. ஒன்று மொர்தெகாயின் வார்த்தையின்படி ராஜாவிடம் தன் ஜனங்களுக்காக மன்றாடுவது, ஆனால் அதில் ஓர் ஆபத்தும் காணப்பட்டது, அழைக்கப்படாதபடி ராஜாவிடத்தில் போகிறவர்களுக்கு அது ராணியாய் காணப்பட்டாலும் மரணம் நிச்சயம். இன்னொன்று தன் ஸ்தானத்தைக் காத்துக் கொண்டு மவுனமாயிருப்பது, அப்படிக் காணப்பட்டாலும் பின்னாட்களில் இவள் யூதப்பெண் என்பது வெளிப்பட்டால் அழிவு அவளுக்கும் நிச்சயம். மொர்தெகாய்க்குள்ளாய் விசுவாசம் காணப்பட்டது, எஸ்தர் இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், ஆனால் உதவி செய்யக் கிடைத்த ராஜமேன்மையை எஸ்தர் இழந்துவிடுவாள் என்பதை அவளுக்கு அறிவித்தான். எஸ்தர், தன் யூத ஜனங்களுக்கு உதவிசெய்து, அவர்களைத் தப்புவித்து, ராஜமேன்மையைக் காத்துக் கொண்டாள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்மை ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், அவருடைய பிள்ளைகளாகவும் அழைத்திருக்கிறார், அது நமக்குக் கிடைத்த ராஜமேன்மை, ஆனால் அத்துடன் நமக்குப் பொறுப்பும், உத்தரவாதமும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்முடைய ஜனங்களுக்காக ஜெபிப்பதும், திறப்பிலே நிற்பதும், பரிந்து பேசுவதுமாகிய பொறுப்பு நமக்குக் காணப்படுகிறது. நாட்களை வீணடித்து, உத்தரவாதத்தை மறந்து மவுனமாய்க் காணப்படும் போது, கர்த்தர் தன்னுடைய காரியங்களை யாரைக் கொண்டும் செய்வார், ஆனால் நமக்குக் கிடைத்த ராஜமேன்மையை நாம் இழந்துவிடுவோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆகையால் இந்நாட்களில் ஆத்துமாக்களுக்காகத் திறப்பிலே நின்று, கர்த்தர் கிருபையாய்க் கொடுத்த ராஜமேன்மையைக் காத்துக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

