இரகசியம் (Secret)

கொலோ 1 : 27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3Ug2mL6-AmY

நம்முடைய ஆண்டவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர், ஒருவரும் அவரோடு சேர முடியாது. அவர் நம்முடைய அறிவுக்கு எட்டாத உயரத்தில் இருப்பவர். ஒருவரும் தேவனைப் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர் நம்மோடு வாசம் செய்கிறார். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் நம்மோடு இருப்பது மாத்திரமல்ல, நமக்குள் இருக்கிறார். நமக்குள் இருக்கும் ஆண்டவர் எப்படி வாசம் செய்கிறார் என்று கேட்டால், அவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வாசம் செய்கிறார்.

உங்களுக்கு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த சேமிப்பு கணக்கில் பணமே இல்லாமல் இருந்தால், அந்த சேமிப்பு கணக்கிற்கு ஏதாவது மதிப்பு இருக்குமா? அந்த சேமிப்பு கணக்கு இருந்தும் பயனில்லை. ஆனால் அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருக்குமென்றால், அடர்க்கு மதிப்பு இருக்கும், மாத்திரமல்ல, வங்கியில் வேலை செய்யும் நபர்கள் உங்களை VIP போல நடத்துவார்கள். அதுபோலத்தான் உங்களுக்குள் இயேசு இல்லாதவரை யாருக்கும் உபயோகப்படாதவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம் செய்கிறார். இது இரகசியங்களிலெல்லாம் மிகப்பெரிய இரகசியம். இரகசியம் என்றால் யாரிடமும் சொல்லாமல் இருப்பதுதான் இரகசியம். ஆனால் பவுலால் இந்த இரகசியத்தை வெளியே சொல்லாமல் இருக்க முடியவில்லை. கிறிஸ்து இயேசு ஒரு மனிதனுக்குள் வாழ்கிறார் என்ற உணர்வை எல்லாரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால், இந்த ரகசியத்தை அவர் கூறுகிறார்.

மீகா தீர்க்கதரிசி, ‘தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்’ (மீகா 2:13) என்று சொல்லுகிறார். ‘நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார் (ஏசா 30:21). அதுபோல பவுல், கிறிஸ்துவானவர் உங்களுக்குள் இருக்கிறார் என்று சொல்லுகிறார். கிறிஸ்து இயேசு எங்கேயோ இருக்கிறார் என்று உலகத்தில் அநேகர் விசுவாசிக்கலாம். ஆனால் அவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார் என்ற விசுவாசம் ஒவ்வொருவருக்கும் காணப்பட வேண்டும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்யும்போது, தேவத்துவத்தின் பரிபூரணம் உங்களுக்குள் வருகிறது. பரிபூரணமான நம் ஆண்டவர் உங்களை பரிபூரணத்தை நோக்கி நடத்தவே வாஞ்சையுள்ளவராக இருக்கிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org