உன் 5 : 16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ImS6IHfZTtE
சாலமோனின் உன்னதப்பாட்டு, கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. திருமணமானவர்கள், ஆகாதவர்கள் என அனைத்து விசுவாசிகளும் இந்தப் புத்தகத்தைப் படித்து, கர்த்தருடனான தங்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் அழகுள்ளவர் என்பது மணமகனின் முழுமையான மற்றும் பரிபூரணமான இயல்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நம்முடைய இயேசு முற்றிலும் “அன்பானவர், இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், சத்தியமானவர்” என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய ஒவ்வொரு குணாதிசயமும் போற்றத்தக்கதாகவும் விரும்பத்தக்கதாகவும் காணப்படுகிறது. பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று எபிரெயர் 4:15 கூறுகிறது.
“இவர் என் நேசர்” என்ற வார்த்தை ஒரு தனிப்பட்ட மற்றும் பிரத்தியேகமான உறவைக் குறிக்கிறது. சாலமோனின் பாடல் முழுவதும் “நேசர்” என்ற சொல் ஒரு ஆழமான, உடன்படிக்கை சார்ந்த அன்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பழைய ஏற்பாட்டில் ஓசியா 2:19-20-இல் கூறப்பட்டுள்ளது: “நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.” புதிய ஏற்பாட்டில், இதை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடலாம்; அங்கு கிறிஸ்து மணவாளனாகவும், திருச்சபை அவருடைய மணவாட்டியாகவும் இருக்கிறது.
“என் சிநேகிதர்” என்ற சொல், அந்த உறவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த உறவு காதல் சார்ந்தது மட்டுமல்லாமல், ஆழ்ந்த தோழமை மற்றும் புரிதலை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் உணர்த்துகிறது. “நான் உங்களை சிநேகிதன் என்று அழைக்கிறேன்” என்று இயேசு சொன்னார். உங்கள் கணவன் மற்றும் மனைவியை தோழர்களாகவும் தோழிகளாகவும் பார்த்து ஆழ்ந்த அன்பில் இருக்கிறீர்களா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இயேசு நம்முடைய ஆத்தும நேசர் மாத்திரமல்ல, அவர் நம்முடைய சிநேகிதரும் கூட.
“எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது” என்று சங்கீதக்காரன் இயேசுவை புகழ்கிறான். கொஞ்சம்கூட குறையாத, கறைபடாத, பழுதொன்றுமில்லாத பரிசுத்த தேவன் தான் முற்றிலும் அழகுள்ளவர். அவர் உங்கள் ஆத்தும நேசராக இருப்பது எவ்வளவு பாக்கியம்! ஆகையால் சங்கீதக்காரன் சொல்லுகிறான் கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனமும் ஜாதியும் பாக்கியமுள்ளது என்பதாக. முற்றிலும் அழகுள்ளவரை தெய்வமாக கொண்ட நீங்கள் பாக்கியவான்கள் பாக்கியவாதிகள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

