கர்த்தருக்குப் பயப்படுதல்: ஆசீர்வாதத்திற்கும் வழிநடத்துதலுக்கும் ஆதாரம் (The Fear of the Lord: The Source of Blessing and Guidance)

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப் போல் இருப்பாள். உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவாமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:2,3)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mSiwj5Lx1QU

நாம் ஜெபங்களில் தொடர்ந்து நினைவுகூர்ந்து ஜெபிக்கும் இரண்டு வேதாகம வசனங்களாக மேற்குறிப்பிட்ட வசனங்கள் காணப்படுகிறது.

இந்த ஆசீர்வாதங்கள்மேல் நாம் வாஞ்சையுள்ளவர்களாகவும், அவற்றைப் பெற்றுக்கொள்ள ஆவலுள்ளவர்களாகவும் இருக்கிறோம். ஆனால், இந்த ஆசீர்வாதங்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? இதற்கான வழியை சங்கீதம் 128:4 நமக்குத் தெளிவுபடுத்துகிறது: “இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்” என்பதாக.
எனவே, இந்தப் பூமிக்குரிய மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நாம் கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

நம்மில் அநேகர் சரியான முடிவுகளை எடுப்பதிலும், சரியான வழிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் தடுமாறுகிறவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, திருமணக் காரியத்தில் பல வரன்கள் வரும்போது, யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், யாரைத் தேர்ந்தெடுத்தால் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறோம்.
அதேபோல், ஒரே நேரத்தில் பல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்போது, எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், உயர்கல்விக்கான நேரத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தால் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் அறியாமல், தீர்மானிப்பதில் சிரமப்படுகிறோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் தவறான முடிவுகளை எடுத்துவிட்டால், பின்னாளில் அதைக் குறித்து வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

இப்படிப்பட்ட நிலைகளில் கர்த்தர் நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சங்கீதம் 25:12 இவ்வாறு கூறுகிறது: “கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ, அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்” என்பதாக. நாம் கர்த்தருக்குப் பயந்து நடக்க வேண்டும், அப்பொழுது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் சரியான வழியை அறிந்துகொள்ளும் ஞானத்தையும், அதைத் தேர்ந்தெடுக்கும் புத்தியையும் நமக்குத் தருவார். கர்த்தர் நமக்காகத் தேர்ந்தெடுக்கும் வழி எப்போதும் நம்முடைய நன்மைக்காகவே இருக்கும். சில நேரங்களில் அவர் காட்டும் வழி நம்முடைய எண்ணங்களுக்கு மாறாக இருக்கலாம்; ஆனால் அந்த வழியில் அவருடைய திட்டமும் ஆசீர்வாதமும் இருக்கும்.

ஆகவே, கர்த்தருக்குப் பயப்படுதலே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படை நிலையாகும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை அவர் தமது வழிகளில் நடத்தி, அவர்களுடைய வாழ்க்கையில் தமது திட்டங்களை நிறைவேற்றுகிறார். ஆகையால், நாம் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாக வாழும்போது, இம்மையில் ஆசீர்வதித்து, மறுமையில் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கச் செய்வார். கர்த்தருக்குப் பயப்படுவதினால் இன்னும் அநேக நன்மைகள் கிடைக்கும் என்பதை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது.

கர்த்தர் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, தமது வழிகளில் நடத்துவாராக. ஆமென்.

Kaveri Mannan
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *