உமது உண்மை பெரியது (Great is your faithfulness)

இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள், உமது உண்மை பெரியதாயிருக்கிறது (புலம்பல் 3:21-23)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XjT1QqlOepU

ஒவ்வொரு புதிய நாள் துவங்கும் போதும் புது நம்பிக்கை நமக்குள் பிறக்கிறது.  அதற்குக் காரணம், கர்த்தருடைய கிருபையும், இரக்கமும், உண்மையும் காலைதோறும் புதியவையாய் காணப்படுகிறது.  அவைகள் நாம் நிர்மூலமாகிவிடாதபடிக்கும், அழிந்துவிடாதபடிக்கும் நம்மைக் காத்துக்கொள்ளப் போதுமானது. கடந்த நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எவ்வளவு துயரத்திற்குரியதாயும், மோசமானதாயும் காணப்பட்டாலும், புதிய விடியலைக் கர்த்தருக்குள் விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்பாருங்கள்.

கர்த்தருடைய உண்மை மகா பெரியது. மனிதர்கள் உதவி செய்வோம், இரக்கம் செய்வோம், உடனிருப்போம் என்று கூறலாம், ஆனால் மறந்து போய்விடுவார்கள், சில வேளைகளில் எதிரிகளாய்க் கூட மாறிவிடுவார்கள். ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், இஸ்ரவேல்  ஜனங்களுக்கு அவருடைய மகா பெரிய உண்மை வெளிப்பட்டதை அவர்களுடைய நாற்பது வருட வனாந்தரப் பயணத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும் புதிய மன்னா பொழிந்தது, தண்ணீர் சுரந்து தொடர்ந்து வந்தது, சமைப்பதற்குரிய விறகுகள் வந்தது, பகலின் வெயிலிலிருந்து பாதுகாக்க மேக ஸ்தம்பமும், இரவின் குளிரிலிருந்து பாதுகாக்க அக்கினி ஸ்தம்பமும்  அவர்களை விட்டு விலகாமலிருந்தது.  கர்த்தருடைய பிள்ளைகளே, காத்தர் உங்களுக்கும் உண்மையுள்ளவராய் ஒவ்வொரு நாளும் வெளிப்படுவார். ஒரு புதிய மாதத்தில் பிரவேசித்திருக்கிற வேளையில் கர்த்தருடைய   உண்மை உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வெளிப்படும். புதிய கிருபைகளையும், புதிய இரக்கங்களையும் உங்கள் அனுதின வாழ்க்கையில் கட்டளையிடுவார், அவருடைய காருண்ணியம்  உங்களைப்  பெரியவர்களாக்கும்.

நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் தம்மைத்தாம்  மறுதலிக்கமாட்டார்  என்று 2 தீமோத்தேயு 2:13 கூறுகிறது. சங்கீதக்காரனாகிய தாவீதைப் பார்த்து சவுல் ராஜா, உன்னால் எப்படி கோலியாத்தை வீழ்த்தமுடியும் என்று கேட்ட வேளையில் அவன் கர்த்தர் எப்படி அவனுடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராய் காணப்பட்டார் என்பதை வெளிப்படுத்தினான். நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நாட்களில் ஒருவிசை சிங்கமும் இன்னொருவிசை கரடியும் வந்தது. கர்த்தர் உண்மையுள்ளவராயிருந்து அவைகளுடைய கையிலிருந்து என்னைப் பாதுகாத்தார், அதுபோல விருத்தசேதனமில்லாத கோலியாத்துடைய கரங்களிலிருந்தும் என்னைப் பாதுகாப்பார் என்ற தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினான். கர்த்தர் அவ்வண்ணமாகவே அவனுக்கு உண்மையுள்ளவராயிருந்து ஜெயத்தைக் கட்டளையிட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,  இந்த புதியமாதம் முழுவதும் கர்த்தருடைய கிருபையும், இரக்கமும், உண்மையும் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். ஆகையால் உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *