இச்சையை சிலுவையில் கொல்லுங்கள்.

இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்(யாக்கோபு 1:15)

இச்சை ஒரு வகை விதை போன்றது அது உனக்குள் வளராதப்படிக்கு அதை சிலுவையில் கொல்லு. இல்லாவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். இதற்கு நீ தப்பித்துக்கொள்ள ஒரே வழி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்வது.

முதலாவது “சுய இச்சையை” சிலுவையில் கொல்லுங்கள்.

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (யாக்கோபு 1:14). சுய இச்சையானது முதலில் எண்ணங்களில் தோன்றி உன் பிரதிஷ்டையை தீட்டுப்படுத்தும், பின்பு தானாகவே கண்ண்யில் சிக்கவைத்து குற்றவாளியாக்கும், சோதனையை கொண்டுவரும் இப்படிப்பட்டவைகளிலிருந்து நீ தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால் உனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை.

இரண்டாவது “மாம்ச இச்சையை” சிலுவையில் கொல்லுங்கள்.

மாம்ச இச்சையானது சரீரத்தில் உண்டாகக்கூடியவை, வெளிப்புற தோற்றத்தை விலையுயர்ந்த பொருளால் அலங்கரிப்பது, மாடலாக உடுத்துவது, மாம்சமும் மனதும் நினைத்ததை அடையணும், விரும்பினதை அனுபவிக்கணும் என்று நினைப்பது இதெல்லாம் மாம்ச பிரகாரமாக தோன்றக்கூடிய சரீர இச்சை இவற்றை நீங்கள் அடக்கவேண்டும். தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ள வேண்டும்(யாக்கோபு 3:2). இல்லையென்றால் அது உன் மன நிலையையும் பாதித்துவிடும். இவைகளிலிருந்து உன்னை காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை.

மூன்றாவது “கண்களின் இச்சையை” சிலுவையில் கொல்லுங்கள்.

கண்களின் இச்சை பாவத்திற்கு வாசலாக இருக்கிறது.ஏனெனில் கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்(மத்தேயு 6: 22,23), ஏவாள் விழுந்து போனதற்கு காரணமே கண்களின் இச்சை, அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருந்தது(ஆதி 3:6). இந்த இச்சைதான் முழு மனுக்குலமும் விழுந்ததுக்கு காரணமாய் அமைந்தது. இவற்றிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால் யோபுவைப் போன்று கண்களோடு ஒரு உடன்படிக்கை செய்யணும்(யோபு31:1).  இதற்கு சரியான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. உனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லையென்றால் இச்சையை உன்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆக சரீரம் என்கிற பலிப்பீடம் எப்பொழுதும் எரிந்துக்கொண்டே இருக்கட்டும், அது அணைந்துபோகாதப்படுக்கு அபிஷேகத்தில் நிறைந்துகொண்டே இருங்கள், பிரதிஷ்டை தீட்டுப்படாமல் ஆவிக்குரிய ஜீவியத்தை காத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக மாறமுடியும்(2 பேதுரு 1:4).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *