விலகியோடுங்கள்:-

பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது இரண்டு காரியங்களுக்கு விலகி ஓடும்படி சொல்லுகிறார்.

முதலில் வேசித்தனத்திற்கு விலகி ஓட வேண்டும். வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான் (I கொரிந்தியர் 6:18). வேசித்தனம், இச்சை போன்ற காரியங்களினால் கவர்ந்திழுக்கும் சூழ்நிலை வரும்போது, அதற்கு தப்பித்துக்கொள்ள ஒரே ஒரு வழிதான் நமக்கு முன்பாக காணப்படுகிறது. என்னவென்றால் அதற்கு விலகி ஓட வேண்டும். போத்திபாரின் மனைவி அனுதினமும் யோசேப்பை வேசித்தனத்திற்குள்ளாக இழுக்கும்படியாக வகைதேடினாள். யேசேப்பு அந்த பாவத்தில் விழாமல் தன்னை காத்துக்கொள்ளும்படியாக செய்த காரியம் அவன் அவளை விட்டு விலகி ஓடினான். வேசித்தனம் செய்ய தூண்டுகிற இடம், நண்பர்கள், உறவினர்கள், பெண்கள், ஆண்கள் யாராக எதுவாக இருந்தாலும் அங்கே கொஞ்ச நேரம் கூட செலவழிக்காமல் முதலில் விலகியோடுங்கள்.

அடுத்ததாக விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடவேண்டும். ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (I கொரிந்தியர் 10:14) என்று வசனம் சொல்லுகிறது. கர்த்தர் அறுவருக்கிற ஒரு காரியம் அது விக்கிரக ஆராதனை. என் மகிமையை விக்கிரகத்துக்கு கொடேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இன்று அநேக சபைக்குள்ளாகவும் இந்த விக்கிரக வழிபாடு பெருகி விட்டது. சபைக்குள்ளாக விக்கிரக ஆசாமிகளை வரவழைத்து அதற்கு பலியிடுகிற காரியங்கள் அரங்கேறிவிட்டது. இப்படிப்பட்ட காரியங்களுக்கு விசுவாசிகள் விலகி ஓட வேண்டும். நண்பர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், உறவுகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றில் கலந்துகொள்ளாமல் மாறாக விக்கிரக வழிபாட்டு ஸ்தலங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு கர்த்தருடைய பிள்ளைகள் விலகி ஓட வேண்டும்.

விக்கிரகமும் வேசித்தனமும் இணைந்து கர்த்தருடைய பிள்ளைகளை பாழாக்கும் என்பதை அறிந்த பவுல் அதற்கு விலகி ஓட வேண்டும் என்று ஆவியானவரின் ஏவுதலின்படி எழுதியிருக்கிறார். ஆகையால் இவைகளுக்கு விலகியோடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *