வார்த்தையல்ல, செய்கை பேசட்டும் (Let actions speak, not words).

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள், மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு என்  திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான், ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான் (மத்தேயு 21:28,29).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rTEi2vGtDP8

இயேசு கழுதைக் குட்டியின் மேல் ஏறி, தாழ்மையும் சாந்தமும் உடையவராய், எருசலேமிற்குப் பவனியாய் வந்ததிலிருந்து அந்த  வாரத்தைப் புனித வாரம் என்று பொதுவாகக் கிறிஸ்தவர்கள் அழைப்பது உண்டு. அந்த ஒரு வாரகாலத்தில் இயேசு செய்தவை, அவருடைய போதனைகள், அவர் கூறிய உவமைகள் என்று அனேகக் காரியங்கள் சுவிசேஷ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கூறிய உவமைகளில் ஒன்று, ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் தன் மூத்த மகனிடம் நீ என் திராட்சத்தோட்டத்தில் இன்றைக்குப்  போய் வேலைசெய் என்று   கூறினான். அதற்கு அவன் தகப்பனுக்கு கீழ்ப்படியாமல், மரியாதையும் தராமல், மாட்டேன் என்று நேரடியாகக் கூறிவிட்டான்.  அவனுக்குத் தகப்பனுடைய சித்தத்தைச் செய்ய விருப்பமில்லை. பின்பு அவனுக்குள் மனஸ்தாபம் வந்தது, ஐயோ என் தகப்பனுக்கு  கீழ்ப்படியவில்லையே என்ற மனவேதனை அவனுக்குள் வந்தது, உடனே அவன் மனம்திரும்பி தகப்பனுடைய திராட்சை தோட்டத்திற்குச்   சென்று வேலை செய்தான்.  அவன் தகப்பனிடம் தவறான வார்த்தைகளைப் பேசிவிட்டான், ஆனால் சரியான காரியத்தைச் செய்தான். 

பின்பு, தகப்பன் இளைய மகனிடம் வந்து தன் மூத்த மகனிடம் சொன்னபடியே நீ என் திராட்சத்தோட்டத்தில் இன்றைக்குப்  போய் வேலைசெய் என்று   கூறினான். இளையவன் உடனே போகிறேன் ஐயா என்று மரியாதையோடு கூறினான்,  ஆகிலும் அவன் போகவில்லை. இவன் சரியான வார்த்தையைப் பேசினான், ஆனால் அதைச் செய்கையில் வெளிப்படுத்த வில்லை. ஆண்டவர் தேவாலயத்தில் வந்து தன்னிடம் எந்த அதிகாரத்தினால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறீர் என்று கேட்ட பிரதான ஆசாரியர்களும், ஜனத்தின் மூப்பர்களும் இந்த இளைய குமாரனைப் போலக் காணப்படுகிறவர்கள் என்றும், வார்த்தைகளினாலும், வெளிப்புறத் தோற்றத்தினாலும் தேவனுக்கு  கீழ்ப்படிகிறவர்கள் போலத் தங்களைக் காட்டிக் கொண்டாலும், அவர்களுடைய இருதயம் தேவனை விட்டு தூரமாய் காணப்படுகிறது என்பதையும் இந்த உவமை மூலம் கற்றுக் கொடுக்கிறவராகக் காணப்பட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, அவ்விரண்டு குமாரர்களில் நாம் யாரைப் போலக் காணப்படுகிறோம். அனேகர் இளையவனைப் போல, வாய்ச்சவடால் வல்லவர்களாய் காணப்படுவதுண்டு. ஆண்டவருக்காக அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்பார்கள், மிகைப்படுத்திப் பேசுகிறவர்களாயும், வீண்பெருமை பேசுகிறவர்களாயும் காணப்படுவார்கள், வசனம், பிரசங்கம், ஆராதனை எல்லாவற்றிலும் அடுக்கு மொழியில் பேசி அசத்துகிறவர்களாய் காணப்படுவார்கள், ஆனால் ஒரு போதும் தங்கள் தவற்றுக்காக  மனஸ்தாபப்படுவதுமில்லை, பரமத் தகப்பனுடைய சித்தத்தைச்  செய்வதற்குத் தங்களை முழுவதுமாய் அர்ப்பணிப்பதுமில்லை. தேவ ஜனமே! சிலுவையைக் குறித்துத் தியானிக்கிற இந்த நாட்களிலாவது, சிலுவை நாதரின் சுபாவங்கள் நமக்குள்ளாய் வந்தால் நல்லது. அவருடைய தாழ்மையும், அர்ப்பணிப்பும், நீதிக்குரிய வாழ்வும் வாழ நம்மை விட்டுக் கொடுப்போம். நம்முடைய வார்த்தை ஜாலங்களால் அல்ல, வாழ்க்கையினால் சிலுவை நாதரை வெளிப்படுத்துவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *