ஏன் சபை? – சபை தேவனுடைய அநாதித் தீர்மானம் (Why Church? – Church is God’s eternal plan).

தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,  உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அனந்த  ஞானமானது சபையின்மூலமாய்  இப்பொழுது தெரியவரும் பொருட்டாக (எபே. 3:9,10)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mUuzDX5pxKk

அநாதி காலம் துவங்கி, சபையைப் பற்றிய திட்டம் தேவனிடமிருந்தது. அவருடைய அனந்த ஞானமானது சபையின் மூலம் வெளிப்பட வேண்டும் என்பது அவருடைய  அநாதி தீர்மானமாயிருந்தது. அதுபோல சபை மக்களாகிய பரிசுத்தவான்களாகிய உங்களையும் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார் என்று எபே. 1:4 கூறுகிறது. ஆகையால் சபையும், சபை மக்களும் தற்செயலாய் நடந்த காரியமல்ல, அது தேவனுடைய அநாதி திட்டமும், தீர்மானமுமாய் காணப்படுகிறது. நீங்கள் சபைகளுக்குச் செல்லும்போது, நீங்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே கர்த்தரால் முன் குறிக்கப்பட்ட ஜனம் என்ற மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் செல்லுங்கள். பூச்சக்கரத்திலுள்ள சகல ஜனங்களிலும் நீங்கள்தான் விஷேசித்தவர்கள், பாக்கியவான்கள் என்ற உணர்வு உங்களுக்குள் காணட்டும்.   கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்ற சங்கீதக்காரனைப் போல, மகிழ்ச்சியோடு கர்த்தரை சேவியுங்கள், சபைக் கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்.

சர்வஞானியாகிய தேவனுடைய எல்லையற்ற, பன்முகத்தன்மை கொண்ட அனந்த ஞானமானது சபையின் மூலம் வெளிப்படவேண்டும் என்பதும் அவருடைய தீர்மானமாயிருந்தது என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. அவருக்குள் ஞானம் அறிவு என்பவையாகிய  பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது என்று கொலோ. 2:3 கூறுகிறது. ஆகையால், சபை கர்த்தருயை அறிவையும், ஞானத்தையும் நாம் கற்றுக் கொள்ளுகிற பள்ளிக்கூடமாய் காணப்படுகிறது.   கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள், திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் என்று ஏசாயா 2:2,3ம் வசனங்களிலும் மீகா 4:1,2ம் வசனங்களிலும் இரட்டை உறுதிப்படுத்துதலோடு எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆலயங்களுக்குச் செல்லும் போது, உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் கொண்டிருக்கிற சித்தத்தையும், உங்கள் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களையும் அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனங்கள் மூலம் கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.  

கர்த்தருடைய பிள்ளைகளே, உலகத்தோற்றத்திற்கு முன்பே சபையையும், உங்களையும் குறித்த வரைபடமும்(blueprint), திட்டமும் ஆண்டவருடைய கரங்களில் காணப்படுவதினாலே, அவருடைய சித்தத்தின் மையத்தில் வாழ உங்களை இன்றைக்கே அர்ப்பணியுங்கள். அப்போது உங்கள் எதிர்காலம் ஆசீர்வாதமாய்க் காணப்படும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *