நல்ல உக்கிராணக்காரன் (A good steward)

1 பேது 4:10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CBNnvChlOWg

நல்ல உக்கிராணக்காரர் என்பவர் எப்படிப்பட்டவர்? அவரை எப்படித் தெரிந்துகொள்வது? ஒருவருக்கொருவர் உதவி செய்கிறவர்கள் தான் நல்ல உக்கிராணக்காரர் என்று மேற்கூறிய வசனம் கூறுகிறது. உக்கிராணக்காரர் அல்லது நிர்வாகி என்பதற்குப் பொறுப்பாளர், மேலாளர், கண்கணிப்பாளர் என்று அர்த்தம் காணப்படுகிறது. வேலைத் தலங்களில் இப்படிப்பட்ட நிர்வாகிகள் காணப்படுகிறார்கள். ஆனால் எல்லா நிர்வாகிகளும் நல்ல நிர்வாகிகளா என்றால், அது அநேக நேரங்களில் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. பவுல், ‘உக்கிரணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாய் இருக்கிறது’ (1 கொரி 4:2) என்று கூறுகிறார். குறிப்பாகச் சபையில் நிர்வாகிக்குரிய வேலையைச் செய்கிற ஒவ்வொருவரும் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். இந்நாட்களில் அநேக சபைகளில் நிர்வாகிகளுக்கு அடுத்த நிலையில் வேலை செய்கிறவர்களிடம் உண்மைத்தன்மை இல்லாத காரணத்தால், சபைகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் வருகின்றன.

தேவன் ஒவ்வொருவருக்கும் வரங்களைத் தருகிறார். அவர் தருகிற வரத்தின்படியே நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உதவியைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக மட்டும் நாம் காணப்படலாகாது; நான் மற்றவர்களுக்கு உதவிகள் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிற சோம்பலான நிர்வாகிகளாகக் காணப்படலாகாது. ஒருவன் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன் என்று 1 பேதுரு 4:11 கூறுகிறது. தேவன் தந்தருளுகிற பெலத்தின்படி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

பொறுப்புடையவர்கள் அல்லது நிர்வாகிகள் வேதாகமத்தில் மிகவும் முக்கியமானவர்கள். மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்திற்கும் நிர்வாகியாக இருந்தான். அதுபோல விசுவாசிகள் ஒவ்வொருவரும் தேவனுடைய ஜனங்கள் மீது பொறுப்புடையவர்களாகவும், அவர்களுக்கு உதவி செய்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும்.

இயேசுவின் போதனைகளில் சேவை அல்லது ஊழியம் என்பது ஒரு மையக் கருத்தாகும். அவர் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலமும் (யோவான் 13:1-17), இறுதியாக சிலுவையில் தமது தியாக மரணத்தின் மூலமும் ஊழியத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்ற அழைப்பிற்காக, ‘உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும்’ என்று மத்தேயு 22:39-ல் இயேசு கூறினார். மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, திருச்சபையைக் கட்டியெழுப்புவதற்கும், சமூகத்தை வளர்ப்பதற்கும், நற்செய்தியின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒரு வழியாகும். ஆகையால், சபையிலிருக்கும் எல்லா உக்கிரணக்காரர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாகத் தெரிகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *