ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும் நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் (யாக். 2:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vYP3ZzKfeUk
யாக்கோபு இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரராவார். அவர் நடைமுறைக்கு ஏற்ற கிறிஸ்தவ ஜீவியத்தைப் பற்றி (Practical Christian Living) தன்னுடைய நிருபத்தில் அதிகமாக எழுதியிருப்பதைப் பார்க்கக்கூடும். அவர் மேற்குறிப்பிட்ட வசனத்தில் இரக்கமுள்ள வாழ்க்கை நியாயத்தீர்ப்புக்கு முன்பாக வெற்றி பெறும் என்பதாகவும், இரக்கமில்லாமல் வாழ்கிறவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பு கிடைக்கும் என்பதாகவும் எழுதினார். இதைத்தான் இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்திலும், இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்றார்.
நம்முடைய தேவனுடைய சுபாவங்களில் மேலான ஒன்று அவர் இரக்கமுள்ளவர். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன் என்று யாத். 20:6ல் கூறினார். அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன், ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர் என்று யாத். 34:6,7 கூறுகிறது. அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாமும் மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்ட வேண்டும் என்று விரும்புகிறார். பிறனிடத்தில் இரக்கம் காட்டும் போது, நாம் ஆண்டவருடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறவர்களாய் காணப்படுகிறோம். நல்ல சமாரியனைப் பற்றிய உவமையில் கூட, கள்ளர் கையில் அடிபட்டு குற்றுயிராய் காணப்பட்ட தன் சொந்தச் சகோதரனுக்கு இரக்கம் காட்ட ஆசாரியனுக்கும், லேவியனுக்கும் விருப்பமில்லை. ஆனால் இஸ்ரவேலின் காணியாட்சிக்கு உட்படாத சமாரியன் அவனைக் கண்டு மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெய்யும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுய வாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மனுக்குலம், அடிபட்டு காணப்பட்ட பிரயாணியைப் போல, சத்துருவினால் காயப்பட்டு, பலவிதமான பாவங்களில் சிக்குண்டு, விடுவிப்பார் யார் என்று கலங்கிக் காணப்படுகிறார்கள். ஆசாரியனைப் போலவும் லேவியனைப் போலவும் காணப்படுகிற கிறிஸ்தவர்கள் இரக்கமில்லாமல் கல்நெஞ்சர்களாய், சுயநோக்குடையவர்களாய் காணப்படுகிறார்கள். நல்ல சமாரியனாகிய இயேசுவைப் போல இரக்கத்தோடு செயல்படுகிற சீஷர்களைக் கர்த்தருடைய கண்கள் இன்று தேடுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் காட்டுகிற இரக்கம் உங்கள் தண்டனைகளுக்கு முன்பாக மேன்மை பாராட்டும். நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலும், எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தேன் என்று பாடுகளின் நடுவில் அறிக்கையிட்ட யோபுவை இரட்டிப்பாய் கர்த்தர் ஆசீர்வதித்தார், அவன் காட்டின இரக்கம் அவனுடைய வாழ்க்கையில் மேன்மை பாராட்டினது. ஒரு கலசம் குளிர்ந்த நீரைக் கொடுத்தால் கூட அதற்குரிய பலன் உங்களுக்குக் காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்றும் சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் என்பதையும் மறந்து போகாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

