அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள் (அப். 17:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aPp3bv05fD0
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தில் ஐரோப்பா கண்டத்திலுள்ள தெசலோனிக்கேயா பட்டணத்தில் ஊழியம் செய்தான். இந்தப்பட்டணம் இந்நாட்களில் கிரீஸ் தேசத்தில் காணப்படுகிறது. அப்போது அங்கே காணப்பட்ட யூதர்களால் ஊழியத்திற்கு மிகுந்த எதிர்ப்பு உண்டானது. உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள். பவுல் அங்குக் கர்த்தருடைய வார்த்தையை விவரித்துக் காண்பித்த போது, அங்கே காணப்பட்டவர்கள் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆகையால் அவர்கள் நற்குணசாலிகளாய் காணப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, வசனத்தை அதிக வாஞ்சையோடு வாசியுங்கள், கேளுங்கள், தியானியுங்கள். எப்படி ஓர் எறும்பு ஞானத்தோடு மழைக்காலத்திற்கும் சேர்த்து தானியத்தைச் சேமித்து வைக்கிறதோ, அப்படியே சுத்த வசன வியாக்கியானம் கேட்கக் கூடாத பஞ்சகாலம் வருகிறபடியால் நீங்கள் வசனத்தை உங்கள் இருதயமாகிய பொக்கிஷத்தில் அதிகமாய் இந்நாட்களில் சேர்த்து வையுங்கள்.
பெரோயா பட்டணத்து ஜனங்கள், ஆரம்பக் கால திருச்சபையின் மிக முக்கியமான அப்போஸ்தலனும், சுமார் பதின்மூன்று நிருபங்களைச் சபைக்கு எழுதிக்கொடுத்த பவுலின் உபதேசத்தைக் கேட்டனர். ஆகிலும் பவுலுடைய போதனை வேதாகமத்திற்கு ஒத்திருக்கிறதா என்று தினம் தோறும் ஆராய்ந்து பார்த்தனர். அவருடைய தோற்றம், அவர் எப்படி மொழியைக் கையாளுகிறார், நகைச்சுவையாகப் பேசுகிறாரா என்பதைப் பற்றி விவாதிக்காதபடி, அவருடைய போதனை வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார்கள். ஆகையால் அவர்களை நற்குணசாலிகள் என்று வேதம் அழைக்கிறது. எபேசு சபை மக்கள், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்வதைச் சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தார்கள் என்று வெளி. 2:2 கூறுகிறது. இந்நாட்களில் காணப்படுகிற கிறிஸ்தவர்கள், ஆடையலங்காரம், அடுக்கு மொழியைக் கையாளுகிறாரா, அவருடைய உடல் மொழி, முகப்பாவனை, கண் அசைவு எப்படி, பாடி நடனம் ஆடுகிறாரா என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிற அளவிற்கு, அவர் பேசுகிற வசனம் வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. ஆகையால், வஞ்சகமான வலைகளில் விழுந்து, தங்களுடைய அழைப்பையும், அபிஷேகத்தையும் இழந்து திசைமாறி ஓடிக்கொண்டிருக்கிற திரளானவர்களைப் பார்க்கமுடிகிறது. பின்னாட்களில் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு தன்னை ஏற்றுக்கொள்ளாத தெசலோனிக்கேயா பட்டணத்து ஜனங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதி மீண்டும் அவர்களை உற்சாகப் படுத்த வேண்டியது அவசியமாயிருந்தது. ஆனால், காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினம்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த நற்குணசாலிகளாய் காணப்பட்ட பெரோயா பட்டணத்தின் ஜனங்களுக்கு அவன் நிருபம் எழுத தேவைப்படவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே, ஆவியானவர் உங்களை நற்குணசாலிகள் என்று அழைக்கப் பாத்திரவான்களாய் நீங்கள் காணப்படுகிறீர்களா?
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

