மல் 4 : 6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4Gz1T3wb7-k
கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு முன்னதாக, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகும் என்பதை மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இது ஏற்கனவே உலகில், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் குடும்பங்களில் கூட நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் இந்நாட்களில் காண்கிறோம். தங்கள் பெற்றோர்கள் தங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று பிள்ளைகள் சொல்லுகிறார்கள்; அதே சமயம், தங்கள் பிள்ளைகள் பிடிவாதக்காரர்களாக அல்லது கீழ்ப்படியாதவர்களாக மாறிவிட்டார்கள் என்று பெற்றோர்கள் குறை கூறுகிறார்கள். இது குடும்பங்களில் மட்டுமல்ல, சபையிலும் ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது. ஆவிக்குரிய பிதாக்களுக்கும், ஆவிக்குரிய பிள்ளைகளுக்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி காணப்படுகிறது. முதிய தலைமுறையினரிடம் மரியாதை காட்டாத ஒரு இளம் தலைமுறை வளர்ந்து வருகிறது.
உலகில் இது Generational Gap அதாவது ‘தலைமுறை இடைவெளி’ என்று கூறப்படுகிறது. ஆனால், சபையில் இத்தகைய தலைமுறை இடைவெளி இருக்கக்கூடாது; ஏனெனில், கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம். தேவன் தம்முடைய செயல்பாடுகளில் முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் பாராட்டுவதில்லை. சபையில் ஆவிக்குரிய முதியவர்கள் இருக்கலாம், ஆவிக்குரிய இளைஞர்கள் இருக்கலாம். இவர்கள் அனைவரும் தலைமுறை இடைவெளி இல்லாமல் இருக்கவேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராக இருக்கிறார்.
பழைய ஏற்பாட்டின் கடைசி வசனமாகிய மேற்குறிப்பிட்ட வசனம் நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு என்று ஒரு சாபத்துடன் முடிவடைகிறது. புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்போடு துவங்கி, கிருபையோடு அதாவது ஆசீர்வாதத்தோடு முடிவடைகிறது. வெளி 22:21-இல் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.” என்று ஆசீர்வாதத்தோடு முடிவடைகிறது. தேவனுடைய வார்த்தை எவ்வளவு அற்புதமான விதத்தில் நிறைவடைகிறது என்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. கிருபையினால் மட்டுமே நம்மால் புதிய எருசலேமின் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேவன் அருளும் பலத்தினாலும் உதவியினாலும் மட்டுமே, பல ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தியிருந்த கட்டுகளிலிருந்து நாம் விடுதலை பெற முடியும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். கிருபை நம் பாவங்களை மன்னிக்கிறது. மாத்திரமல்ல, பாவம், உலகம் மற்றும் சாத்தானை வெல்லவும் கிருபை நமக்கு உதவுகிறது. பழைய ஏற்பாட்டின் இறுதியில் இருந்த சாபத்திலிருந்து விடுதலை பெற்று, புதிய ஏற்பாட்டில் கிருபைக்குள் வந்து, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து, நித்தியத்திற்கு நேராக கடந்து செல்லுவது எவ்வளவு அற்புதமான காரியம். நம் பாவங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கும், தேவனுக்கும் எல்லா மகிமையும், துதியும், கனமும் உண்டாவதாக. ஆமென்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

