ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்(Speak of your thankfulness to God):-

எபேசியர் 5:4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4Ho0NYkK7yk

இந்த வசனத்தில் மூன்று காரியங்கள் தகாதவைகள்; ஆனால் ஒரு காரியம் தகும் என்று ஆவியானவர் அப்.பவுல் மூலமாக எபேசு சபைக்கு எழுதிவைத்திருக்கிறதை பார்க்கலாம்.

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம் (எபே 4 : 29 ) என்றும் நாம் வாசிக்கிறோம். அநேக நேரங்களில் அநேகரை நாம் வஞ்சித்து தகாதவிதமாய் பேசிவிடுகிறோம். பேசிவிட்டு வசனம் சொல்கிற மாதிரி “அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான் (நீதி 26 : 19 )” என்று மிகவும் சுலபமாக சொல்லிவிட்டு மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறோம். சற்று நாம் யோசித்து பார்க்கவேண்டிய நாட்களில் இருக்கிறோம். இந்த 2023ம் வருடம் முழுவதும் எத்தனை முறை தகதவைகளை செய்திருப்போம். எத்தனை முறை மற்றவர்களை தங்களுடைய நாவால் காயப்படுத்தியிருப்போம். எல்லாவற்றையும் கர்த்தரிடம் சொல்லி, அவருடன் ஒப்புரவாகி, காயப்படுத்தினவர்களுக்காக ஜெபித்து, அவர்களுக்காக ஸ்தோத்திரித்து புதிய வருடத்திற்குள்ளாக கடந்து செல்ல வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறவராக இருக்கிறார்.

ஆம், ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து (எபே 5 :20 ) என்று கர்த்தர் சொல்லுகிறார். 2023ல் கர்த்தர் கொடுத்த ஜனங்களுக்காக, உங்களுக்கு எரிச்சலூட்டின நபர்களுக்காக, உங்களை துக்கப்படுத்தின சகோதர சகோதிரிகளுக்காக, உங்களை பரியாசம் பண்ணினவர்களுக்காக, உங்களை கீழே தள்ளவேண்டுமென்றிருந்தவர்களுக்காக, எல்லாவற்றிக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். அதுவே தகும். 

ஒரு வாலிப சகோதரன், அவனுடைய நெருங்கிய பாலிய சிநேகிதனை திடீரென்று நாவால் குற்றப்படுத்தி, காயப்படுத்தி அவனுடுய உள்ளம் உடையும் வண்ணமாக பேசிவிட்டான். அதனால் இருவரும் இரண்டு மூன்று வருடங்கள் பேசாமல் பிரிந்துவிட்டார்கள். இந்த சம்பவம் அந்த வாலிப சகோதரனுக்கு உள்ளத்தில் குத்தினாலும் ஒப்புரவாக மனதில்லாமல் இருந்தான். ஒரு நாள் ஆவியானவர் அவனோடு கூட பேசினதால் மூன்று வருடம் கழித்து தன்னுடைய நண்பனை சந்தித்து  பேசின வார்த்தைக்காக ஒப்புரவாகி, அன்று இரவு கர்த்தரிடம் தன்னுடைய நண்பனுக்காக வாய் விட்டு ஸ்தோத்திரம் செலுத்தினான். அவனுக்கு உள்ளத்தில் ஒரே மகிழ்ச்சி, ஒரே சமாதானம், சந்தோசம் அது மாத்திரமல்ல அந்த வாலிப சகோதரனுக்கு தடைபட்டு வந்த நீண்ட நாள் ஆசிர்வாதமும் கை கூடி வந்தது.

எல்லாருக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அதுவே தகுதியானது.

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும் (சங் 33 : 1 ).

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org