ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது (மத்தேயு 2:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YdMr_6wzwL8
இயேசு பிறந்தபொழுது கிழக்கிலிருந்த ஞானிகள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டார்கள். அந்த நட்சத்திரம் வழிகாட்ட, அவரை தொழுதுகொள்ளும் படிக்கு எருசலேமிற்கு வந்தார்கள். இயேசு தன்னைக்குறித்துக் கூறும்போது நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்(வெளி.22:16). அதுபோல இயேசுவுக்கு முன்பு சுமார் ஆயிரத்திஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும் ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்(எண். 24:17) என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். ஒருபுறம் இயேசு நட்சத்திரத்திற்கு ஒப்பிடப்பட்டிருந்தாலும், கிழக்கிலேயிருந்து வந்த ஞானிகள் அவருடைய சிருஷ்டிப்பாகிய வேறொரு நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். அவருடைய நட்சத்திரம் ஞானிகளை இயேசுவண்டை நடத்தினது.
ஆபிரகாமுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படி, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் வானத்து நட்சத்திரங்களாகக் காணப்படுகிறோம் (ஆதி.15:5). அதுபோல கர்த்தர் தன்னுடைய ஊழியக்காரர்களையும் தன் வலக்கரத்தில் நட்சத்திரங்களாக வைத்திருக்கிறார் என்று வெளி. 1:20ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நட்சத்திரங்களாகக் காணப்படுகிற நாம் செய்யவேண்டிய பிரதான பணி, ஜனங்களைக் கர்த்தரண்டை நடத்தவேண்டும். இயேசுவை அறிகிற அறிவில் வளர ஜனங்களை வழிநடத்த வேண்டும். இயேசுவோடு ஐக்கியம் கொண்டு, அவருடைய சிந்தையைத் தரித்து, அவருடைய சாயலை அணிய வழிகாட்ட வேண்டும். நாம் சாட்சியுள்ள முன்மாதிரியின் ஜீவியம் செய்து, மற்றவர்களையும் நம்முடைய வெளிச்சத்தில் நடக்க மனதுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
இயேசுவின் முதல் சீஷனாகிய அந்திரேயா சுவிஷேச புத்தகங்களை எழுதவில்லை, நிருபங்களையும் எழுதவில்லை, அவர் செய்த பிரதான பணி ஜனங்களைக் கர்த்ரண்டை நடத்துகிறவராகக் காணப்பட்டார். அவன் முதல்முதலாக தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவை இயேசுவண்டை நடத்தினான்(யோவான் 1:41). பின்பு சில கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பினார்கள், அவர்களை இயேசு வண்டை அழைத்துக்கொண்டு வந்தான்(யோவான் 12:21). அதுபோல ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருந்த சிறுவனை ஆண்டவரண்டை நடத்தி, அதைக்கொண்டு கர்த்தர் அனேகரைப் போஷித்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, அனேகர் உலகத்தில் வழிதவறி, மனிதனால் உருவாக்கப்பட்ட பல மார்க்கங்களைப் பின்பற்றிக் கொண்டு காணப்படுகிற இந்நாட்களில், மெய் வழியாகிய இயேசுவை சொந்ந இரட்சகராகக் கண்டுகொண்ட நாம், மற்றவர்களையும் இயேசுவண்டை நடத்த நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இயேசு பிறந்த நாட்களில் இருளிலிருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டதைப் போல, இந்நாட்களிலும் இருளின் அதிபதியாகிய சத்துருவின் பிடியில் காணப்படுகிற ஜனங்களை உலகத்தின் ஒளியாகக் காணப்படுகிற இயேசு வண்டை நடத்துகிற நட்சத்திரங்களாய் நாம் காணப்படவேண்டும். அப்போது இம்மையிலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார், மறுமையில், ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் (தானி. 12:3) என்ற வார்த்தையின்படி நம்மைத் தேவனுடைய ராஜ்யத்திலும் பிரகாசிக்கும் படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar