லூக்கா 2 : 10,11 . தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YktjZ3PdL5A
இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியை தேவ தூதன் முதலாவது மந்தையை காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சொன்னான். முதல் வார்த்தை தூதன் சொன்னது பயப்படாதிருங்கள். இதுவரையில் பாவம், சாபம், வியாதி, மரணம் போன்ற பயத்தால் இருக்கும் ஜனங்களுக்கு ஒரு நற்செய்தியென்னவென்றால் அது பயப்படாதிருங்கள் என்பது தான். காரணம் உலகத்தில் இருக்கும் எல்லா ஜாதிக்கும் ஒரு நற்செய்தி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு சில குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல, எல்லா ஜாதிக்கும் ஒரு நற்செய்தி. பூமியில் இருண்ட காலம் நிலவி கொண்டிருந்த நாட்கள், நீதியின் சூரியன் எப்பொழுது உதிப்பார் என்று ஏங்கி கொண்டிருந்த நாட்கள்; இப்படிப்பட்டதான நாட்களில் தான் குறித்த நேரத்தில் எல்லா தீர்க்கதரிசிகளும் உரைத்தது நிறைவேறும் வண்ணமாக இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை தூதன் வந்து சொன்னான்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பதாக கிறிஸ்து தாவீதின் ஊரில் பிறந்தது உண்மைதான், ஆனால் அதே கிறிஸ்து இன்று அநேகருடைய உள்ளங்களில் பிறக்க வேண்டும். இன்று அநேக இடங்களில் கிருஸ்துமஸ் என்றால் வெறும் சடங்காச்சாரம் இல்லை பொழுது போக்காக மாறிப்போய்விட்டது. மேலை நாடுகளில் மாத்திரமல்ல நம் தேசத்திலும், கிறிஸ்துமஸ் என்றால் நண்பர்களுடன் மதுபானம் அருந்துவது இல்லையென்றால் மதுபானம் வாங்கிக்கொடுப்பது, திரைப்படங்களுக்கு செல்வது, வீணான பெருமை , மேட்டிமை நிறைந்ததாக மாறிவிட்டது. பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு தாவீதின் ஊரில் பிறந்தார் என்பதை மறந்து, எந்த பாவத்திலிருந்து மீட்டெடுக்க கிறிஸ்து பிறந்தாரோ, அதை மறந்து கிறிஸ்துவர்களாகிய நம்மில் அநேகர் அதே பாவத்தை செய்துகொண்டிருக்கிறோம்.
இந்த பண்டிகை நாட்களில் வாசற்படியிலுருந்து இயேசு கதவை தட்டிக்கொண்டிருக்கிறார். உங்களுடைய உள்ளத்தில் அவர் பிறக்க வேண்டுமென்று. ஒரு வேளை என்னுடைய உள்ளத்தில் இயேசு பிறந்திருக்கிறார் என்ற நிச்சயம் எனக்கு இருக்கிறது என்று சொல்வீர்களென்றால், நல்லது; அதே வேளையில் அநேகருடைய உள்ளத்தில் அவர் பிறக்கவில்லை என்ற கரிசனையோடு அவர்களுக்காக அவர்கள் உள்ளத்தில் இயேசு பிறக்கவேண்டுமென்று ஜெபிக்கிறவர்களாக, தூதர்கள் கொண்டு வந்த நற்செய்தியை நாமும் கொண்டு செல்கிறவர்களாக இருப்போமென்றால், அது ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org