நீதி 17 : 27 அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Pn2i0wZrqI4
யார் அறிவாளி? எப்படிப்பட்டவர் அறிவாளி என்று அழைக்கப்படுகிறார்? அதிகப்படியாகப் படித்தவர் அறிவாளியா? இல்லை, அதிகப் பணம் வைத்திருப்பவர் அறிவாளியா? இல்லை, பெரிய பதவியில் இருப்பவர் அறிவாளியா? நன்றாகப் படித்தும், பெரிய பொறுப்பிலிருந்தும், அதிகச் செல்வத்தை வைத்திருக்கும் ஒருவர் அறிவில்லாமல் இருக்க முடியும் என்பது தெரியுமா?
அதிகம் பேசும் ஒருவன் ஒருபோதும் ஞானமுள்ளவனாக அல்லது அறிவாளியாக இருக்கமாட்டான் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. அந்த விதிக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. எப்போதும் வாயைத் திறந்து எதையாவது பேசிக்கொண்டிருப்பதில் ஞானம் இல்லை. சபையிலும் கூட பல சகோதரர்களிடமும், பல சகோதரிகளிடமும் இதைக் காணலாம். அவர்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள் மற்ற சகோதரர்களுடனோ அல்லது சகோதரிகளுடனோ அமர்ந்திருக்கும்போது, யார் அதிகம் பேசுகிறார்கள்? எப்போதும் அதிகம் பேசுபவர் நீங்கள்தான் என்று நீங்கள் கண்டறிந்தால், அந்த ஐக்கியத்தில் உள்ள முட்டாள்களின் பட்டியலில் உங்கள் பெயரை முதலிடத்தில் வையுங்கள். அந்தப் பட்டியலின் முதலிடத்தில் இருப்பது நீங்கள்தான்; எப்போதும் அதிகம் பேசுபவர். உங்களால் ஒருபோதும் வாயை மூட முடியாது.
ஒரு ஞானமுள்ளவன் தன்னை எப்படிக்கட்டுப்படுத்திக்கொள்வது என்று அறிந்திருப்பான். அவன் எல்லா நேரமும் பேசிக்கொண்டிருக்க மாட்டான்; காரணம், அவனிடம் அறிவு இருக்கிறது. அவன் தன் அறிவைப் பற்றிப் பெருமை பேசவோ அல்லது வேதாகமத்தைப் பற்றித் தனக்கு அதிகம் தெரியும் என்று காட்டிக்கொள்ளவோ மாட்டான். ஞானம் என்பது என்ன பேசுவது என்று அறிவது மட்டுமல்ல, மாறாக நமது வேதாகம அறிவைச் சரியாகப் பயன்படுத்துவதாகும். எதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும், எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்று அறிவதே ஞானம். சிலருக்கு மீண்டும் மீண்டும் பேசத் தூண்டும் ஒருவித ஆர்வம் இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், அவர் தன்னை மிகவும் முக்கியமானவராக நினைப்பதே! நீங்களே உரையாடல்களில் (meetings) ஆதிக்கம் செலுத்தாதீர்கள், அப்படிச் செய்தால் மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பே கிடைக்காது.
தன்னை மற்றவர்கள் அறிவாளி என்று அழைத்தால் எல்லாருக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் அறிவாளி என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் சுருக்கமாகக் காணப்பட வேண்டும். பெருமையானவற்றைச் பேசும் வாய் என்பது அந்திகிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் உரியது. வைகை அணை காவேரி அணையைத் திறந்துவிட்டால் தண்ணீர் எப்படிப் பெருக்கெடுத்து ஓடுமோ, அதுபோலத்தான் அநேகருக்கு இந்நாட்களில் வாய் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்களாக இல்லாமல், வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள்; அப்பொழுது நீங்கள் அறிவாளி என்று அழைக்கப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

