நீதி 20 : 22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aVHCxQ6Dsjw
ஒருவர் நமக்குத் தீமை செய்தால் பதிலுக்கு அவருக்குத் தீமை செய்யக்கூடாது என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. அதாவது நாம் யாரையும் பழிவாங்கக் கூடாது. அந்த விஷயத்தைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று நாம் விட்டுவிட வேண்டும். பழைய ஏற்பாட்டில் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தாவீது. சவுல் ராஜா தாவீதின் உயிரைப் பறிக்கத் துடித்தார், ஆனாலும் பதிலுக்கு சவுலின் உயிரைப் பறிக்க அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. தாவீது அந்த விஷயத்தை தேவன் பார்த்துக்கொள்ள அனுமதித்தார். தேவன் சவுலைக் கவனித்து, அவருடைய சரியான நேரத்தில் அவரைக் கையாண்டார். மாத்திரமல்லாமல், கர்த்தர் தாவீதை அரியணையில் அமர்த்தினார். பழிவாங்க வேண்டும் என்ற ஒரு பெரிய இச்சை நம்முடைய மாம்சத்தில் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இச்சை உங்களுக்குள் இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்கள் மாம்சத்தில் என்ன குடியிருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்பதையே அது காட்டுகிறது. பழிவாங்க வேண்டும் என்ற ஒரு இச்சை நமக்குள்ளே இருக்கிறது. நீங்கள் வெறுப்பவர்கள் மீது மட்டுமே பழிவாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். தீமைக்குத் தீமையால் பதிலடி கொடுக்க நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம்.
உங்களை நன்றாக நடத்தாத ஒருவருக்கு ஏதேனும் கெடுதல் நடக்கும்போது, உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு மகிழ்ச்சி ஏற்படுகிறதா? அதுவும் இதே பழிவாங்கும் ஆவியின் ஒரு வெளிப்பாடுதான். சவுல் மரித்துவிட்டார் என்று தாவீது கேள்விப்பட்டபோது, அந்தச் செய்தியைக் கேட்டு அவர் உள்ளுக்குள் சந்தோஷப்படக்கூட இல்லை. சவுலின் சிம்மாசனத்தை தாவீது ஒருபோதும் இச்சிக்கவில்லை, விரும்பவில்லை; தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மிகவும் மோசமாக நடத்திய நபருக்கு ஏதேனும் கெடுதல் நடந்தபோது அவர் சந்தோஷப்படவும் இல்லை. ஆகையால் தான் தேவன் தாவீதை, “என் இருதயத்திற்கு ஏற்ற மனிதன்” என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை. உங்களுக்குத் தீமை செய்தவருக்குத் தீமை செய்யும், அதாவது பதிலடி கொடுக்கும் பொறுப்பை ஒருபோதும் நீங்களே எடுத்துக்கொள்ளாதீர்கள். கர்த்தர் மீது நம்பிக்கை வையுங்கள், அவர் எல்லாவற்றையும் அவருடைய பாணியில் பார்த்துக்கொள்ளுவார்.
உங்களை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பியுங்கள் என்றும், ஒருவன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால் அவருடன் பத்து மைல் தூரம் கூட நடந்துபோங்கள் என்றும், உங்களுடைய ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு மற்றொரு ஆடையையும் கொடுத்துவிடுங்கள் என்றும் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அவைகளைச் செயல்படுத்துவது கடினம் என்று பிசாசு உங்கள் சிந்தையைத் தாக்கலாம்; “நீ எப்படி அவன் செய்த தீமைக்கு பதில் செய்யாமல் சும்மா இருப்பது?” என்றெல்லாம் உங்கள் சிந்தையுடன் தொடர்பு கொள்ளலாம். இதில் தேவ ஜனங்கள் மிகவும் கவனமாகவும், சர்ப்பங்களை போல வினாவுள்ளவர்களாகவும் , புறாக்களைப் போலக் கபடற்றவர்களாகவும் காணப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

