வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசாயா 8:20).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qZxLqyqOK_I
வேதம் மற்றும் சாட்சி ஆகமம் என்ற இரண்டும் தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது. இந்நாட்களில் கவனிக்கப்பட வேண்டியதும் முக்கியப்படுத்த வேண்டியதும் கர்த்தருடைய வார்த்தையாய்க் காணப்படுகிறது. ஆனால் சபைகள் கர்த்தருடைய வார்த்தையை விட்டுவிட்டு மற்றவற்றைக் கவனித்துப்பார்த்து தவறான வழிகளில் செல்கிறார்கள். தேவனுடைய வார்த்தையை விவரிப்பதற்கு எட்டு எபிரேய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சங்கீதம் 119ல் வாசிக்கமுடிகிறது. முதலாவது பிரமாணங்கள்(Law) என்பது, இதற்கு தேவனிடத்திலிருந்து வருகிற அறிவுறுத்தல் அல்லது போதனை என்பது அர்த்தம். இரண்டாவது சாட்சியம்(Testimony) என்பது, இது தேவனுடைய தன்மை, உடன்படிக்கை, செயல்களை நமக்கு நினைவூட்டுவது. மூன்றாவது கட்டளைகள் (Commandments), இது தேவன் மனிதன் மீது வைத்திருக்கிற அதிகாரத்தின்படி கீழ்ப்படிவதற்குரிய தெளிவான உத்தரவுகளாய்க் காணப்படுகிறது. நான்காவது சட்டம் அல்லது விதிகள் (Statute) என்பது, தேவன் மனிதனுக்கு வகுத்திருக்கிற நிரந்தரமான, நிலையான, மாற்றமுடியாத எல்லைகளைக் குறிக்கிறது, நாம் அவைகளுக்குள் வாழவேண்டும். ஐந்தாவது நெறிமுறைகள் (Precepts) என்பது, மனிதப் பொறுப்பு மற்றும் கடமைகளைக் குறிக்கிறது. ஆறாவது நியாயத்தீர்ப்புகள் (Judgements) என்பது, மனுகுலத்தைக் கட்டுப்படுத்தும் தீர்ப்புகள், முடிவுகள் மற்றும் நீதிநெறிகளைக் குறிக்கிறது. ஏழாவது வார்த்தை (Word) என்பது, தேவனுடைய வசனத்தைக் குறிப்பதற்கு பொதுவாகப் பயன்படுத்துகிற வார்த்தையாய் காணப்படுகிறது. எட்டாவது வாக்கு அல்லது வாக்குறுதி (Promise) என்பது, அது தேவனிடத்திலிருந்து வருகிற நல்வாக்கையும் வாக்குத்தத்தத்தையும் குறிக்கிறதாய்க் காணப்படுகிறது. ஒரே தேவனுடைய வார்த்தை, அதைப் பல முறைகளில் கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனியுங்கள். அப்போது நீங்கள் வழி விலகுவதில்லை, உங்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற பாதையில் இலக்காகிய இயேசுவை நோக்கித் தொடர்ந்து ஜெயமாக ஓடுவீர்கள். ஊழியம் செய்கிறவர்கள் சொந்த அனுபவங்களையும், நகைச்சுவைகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும், உணர்ச்சிகரமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடனமாடி நடித்துக் காட்டுவது போதும். ஒரு பரிசுத்தவான் இப்படியாய்ச் சொன்னார், ஆத்துமாக்களை இரட்சிப்பது தேவனுடைய வார்த்தையே தவிர, தேவனுடைய வார்த்தையைக் குறித்த மனிதனுடைய கருத்து அல்ல என்பதாக. இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை என்று மேற்குறிப்பிட்ட வசனம் எச்சரிக்கிறது. எவரொருவர் வசனத்தை முக்கியப்படுத்தாதபடி, மற்ற காரியங்களை முக்கியப்படுத்தினால் அவர்களுக்குள் தேவனுடைய வெளிச்சமில்லை, அப்படிப்பட்டவர்கள் இருளின் அதிபதியாகிய பிசாசின் ஆளுகைக்குள் காணப்படுகிறார்கள். சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்று ஏசாயா 8:16 கூறுகிறது. கர்த்தருடைய சீஷர்கள் எப்பொழுதும் வேதத்தை முக்கியப்படுத்தி வாழ்வார்கள், கோதுமைக்கு முன் பதர் எம்மாத்திரம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

