உங்கள் கைகள் விரோதிகளின் மேலிருக்கும் (Your hands will be lifted upon adversaries)

மீகா 5:9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/A6tXnoE1eEo

ஆண்டவர் எஞ்சியுள்ளவர்களுக்கென்று (Remnant) ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார். மீகா 5:7-9 வரை எஞ்சியுள்ளவர்களுக்கென்று கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் காணப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் மேற்குறிப்பிட்ட வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி, உங்களை விரோதிக்கிற சத்துருக்கள் பலர் இந்த உலகத்திலிருந்தாலும் அவர்களுக்குக் கீழாக உங்கள் கைகள் தளர்ந்துபோய் இருப்பதில்லை; மாறாக, உங்கள் கைகள் உங்களை விரோதிக்கிறவர்களுக்கு மேலாக உயர்ந்து இருக்கும். தங்களை ஒடுக்கி அச்சுறுத்திய எதிரிகளுக்கு எதிராகத் தம் மக்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று தேவன் வாக்களிக்கிறார். உயர்த்தப்பட்ட கரம் இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் ஜெயம் இருக்கும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேலர்கள் அமலேக்கியர்களுடன் போரிட்டபோது, மோசே தம் கைகளை உயர்த்தியபோது ஆரோனும் ஊரும் உயர்த்திய மோசேயின் கைகளைத் தாங்கிப்பிடித்தார்கள். உயர்த்தப்பட்ட கரம் என்பது உலகத்திலிருக்கும் இராணுவத்தை காட்டிலும் வலிமைமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அப்பொழுது களத்திலிருந்த யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் அமலேக்கியர்களை வீழ்த்தினார்கள். யாக்கோபு தன்னுடைய பன்னிரண்டு குமாரர்களையும் ஆசீர்வதிக்கும்போது, யூதாவைக் குறித்து இப்படிச் சொன்னான்: யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள் (ஆதி 49:8). இதுதான் கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம். சத்துரு உங்கள் கழுத்தை பிடித்து நெறிப்பதில்லை; மாறாக, உங்கள் கரங்கள் சத்துருவின் பிடரியில் இருக்கும். சங் 18:40-ல் தாவீது சொல்லுகிறான், நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர் என்பதாக.

உங்கள் சத்துருக்கள் எல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். தாவீதைச் சுற்றிலும் பொல்லாதவர்களும், நியாயக்கேடு செய்கிறவர்களும் அநேகர் காணப்பட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்த தாவீதுக்கு கர்த்தர் சொல்லுகிறார், பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னும் கொஞ்ச நேரம்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை (சங் 37:9, 10) என்பதாக. இன்னும் கொஞ்ச நேரம் தான், உங்களுக்கு விரோதமாக சத்துரு எழுப்பிவரும் அவனுடைய ஏஜென்ட்கள் காணாமல் போய்விடுவார்கள். பின்பு, நீங்கள் அவர்களைத் தேடினாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார். ஆண்டவர் உங்களை விரோதித்தவர்களின் கண்களுக்கு முன்பாக உங்களை மேன்மைப்படுத்துவார். உங்கள் கைகள் உயர்ந்தே காணப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org