ஏசா 52 : 13 இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/frg3viKhTMM
வேதாகமத்தில் தாசன் என்று தேவனால் அழைக்கப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். என் தாசனாகிய ஆபிரகாமிற்கு நான் ஒன்றும் மறைக்கமாட்டேன் என்று தேவன் ஆபிரகாமை தாசன் என்று அழைத்தார். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன் (எண்ணா 12 : 7 ) என்று மோசேயை தேவன் தாசன் என்று அழைத்தார். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவன் (எண்ணா 14 : 24 ) என்று காலேப் தேவனால் தாசன் என்று அழைக்கப்பட்டான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? (யோபு 1 : 8 ) என்று யோபுவை தேவன் தாசன் என்று அழைத்தார். என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல .. (ஏசா 20 : 3 ) என்று ஏசாயா தீர்க்கதரிசி ஊழியக்காரன் அதாவது தாசன் என்று அழைக்கப்பட்டான். செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் (ஆகாய் 2 : 23) என்று செருபாபேலும் ஊழியக்காரன் என்று அழைக்கப்பட்டான்.
மேற்குறிப்பிட்ட வசனம் ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவைக் குறித்து அவர் பிறப்பதற்கு முன்பு சுமார் 700 வருடங்களுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொன்ன வார்த்தையாய் காணப்படுகிறது. இங்கே இயேசுவை தாசன் என்று அறிமுகப்படுத்துவதை நாம் பார்க்கலாம். தாசன் என்றால் ஆங்கிலத்தில் Servant என்று அர்த்தம். அதாவது ஊழியக்காரன் என்றும், இன்னும் சொல்லப்போனால் அடிமை என்றும் அர்த்தம். இராஜாதி இராஜா என்னும் தகுதியுடையவர் இங்கே அடிமை என்று அழைக்கப்படுகிறார். இயேசு தன்னை மரணபரியந்தம் தாழ்த்தி, அடிமையின் ரூபம் எடுத்தார் என்று பவுல் கூறுகிறான். அடிமை என்றால் தன்னால் சுயமாய் முடிவெடுக்காமல் தன் எஜமானின் சொல்படி செய்கிறவன். இங்கே இயேசு நம்மெல்லாருக்கும் முன்மாதிரியாக அடிமையாக தன்னை காண்பித்தார். சொல்லப்போனால் நாமெல்லாரும், கர்த்தருடைய பணியை செய்கிற எவராக இருந்தாலும் அடிமை என்றே அழைக்கப்படுகிறோம்.
சாதாரணமாக, சிறிய பொறுப்பிலிருக்கும் நபர்கள், பெரிய பொறுப்பிற்கு செல்லுவார்கள். உதாரணத்திற்கு Supervisor என்ற பதவியிலிருப்பவர்கள் Manager என்ற பதவிக்கு செல்லுவார்கள். யார் ஒருவரும் இதற்கு மாறாக Manager என்ற பொறுப்பிலிருந்து Supervisor என்ற பொறுப்பிற்கு வருவதில்லை. ஆனால் இயேசு தன்னுடைய உயர் பதவியை துறந்து சாதாரணமாக அடிமை என்ற இடத்திற்கு இறங்கினார். இந்த உலகில் சாதாரணமான பொறுப்பிலிருக்கும் நபர்களே தங்களுடைய பணியிடங்களிலிருக்கும் நாற்காலியை யாருக்கும் விட்டுத் தரமாட்டார்கள். உலகத்தில் எந்த ஒரு பெரிய தலைவர்களாக இருந்தாலும் தங்கள் Position ஐ மற்றவர்களுக்கு விட்டுத் தருவதில்லை. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும், தன்னுடைய சிங்காசனத்தை துறந்து அடிமையாக இந்த உலகத்திற்கு வந்தார். தேவசாயலிலிருந்த அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் மனுஷ சாயலானார். தேவ குமாரனாக இருந்த அவர், நம் ஒவ்வொருவருக்காகவும் மனுஷ குமாரனாக அவதரித்தார். அப்படி தாழ்மையின் ரூபமெடுத்தவரை பிதாவாகிய தேவன் உயர்த்தினார். அதுபோல கர்த்தருடைய பணியில் உண்மையாய், தாழ்மையோடு, நான் தேவனுக்கு அடிமை என்ற உணர்வோடு பணிசெய்கிற எவரையும் கர்த்தர் உயர்த்துவது சாத்தியம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

