மீட்டெடுக்கும் வரைக்கும் இளைப்பாறமாட்டார் (He will not rest until He redeems).

ரூத் 3 : 18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Gbg1WAapjw

ரூத்தின் சரித்திரத்தில் சுதந்திரவாளி அதாவது ஆங்கிலத்தில் Redeemer என்ற வார்த்தை அநேக முறை இந்த புஸ்தகத்தில் வருகிறது. மோவாபிய பெண்ணாகிய ரூத்தை மீட்டெடுக்க நெருங்கிய சுதந்திரவாளி இருந்தான். அதுபோல தான் பாவத்தின் பிடியிலிருக்கும் நம்மை மீட்டெடுக்க நெருங்கிய சுதந்திரவாளியாக நியாயப்பிரமாணம் இருந்தது. ஆனால் நெருங்கிய சுதந்திரவாளி ரூத்தை மீட்டெடுக்கவில்லை. அதற்கடுத்தபடியாக நெருங்கிய சுதந்திரவாளியாகிய போவாஸ் ரூத்தை மீட்டெடுத்தான். அதுபோல தான் நியாயப்பிரமாணம் செய்யாததை இயேசுவின் கிருபை செய்தது. நாம் அனைவரும் இயேசுவின் கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம். அந்த கிருபையை இயேசு தன்னுடைய இரத்தத்தை சிந்தி சம்பாதித்துக்கொடுத்தார்.

மேற்குறிப்பிட்ட வசனத்தில் நிச்சயமில்லாத காரியத்தில் நகோமி மனஉறுதியாய் இருந்தாள். இந்த உலகில் அநேக காரியங்கள் நிச்சயமில்லாததை போல காணப்படும். ஆனால் நாம் தேவன் மீது விசுவாசத்தை வைத்து பொறுமையாய் காத்திருக்கவேண்டும். ஆபிரகாம் தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான் என்று எபி 11:8 கூறுகிறது. ஆபிரகாமுக்கு இருந்த மனவுறுதியை சற்று கவனித்துப்பாருங்கள். இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று யோபு 23:8, 10 வசனங்கள் கூறுகிறது. இங்கே யோபுவிற்கு இருந்த மனவுறுதியையும் பாருங்கள். இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன் என்று பவுல் அப் 20:22-24ல் கூறுகிறான். இந்த வசனத்தில் பவுலுக்கு இருந்த மனவுறுதியை கவனித்துப்பாருங்கள்.

ரூத்தைப் போல, ஆபிரகாமைப் போல, யோபை போல, பவுலைப் போல நீங்களும் மனவுறுதியுடன் இருங்கள். ஒருவேளை இரட்சிக்கப்படாத உங்களுடைய மனைவி, கணவன், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை குறித்து அநேக நாள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். உங்கள் கவலைகளை இயேசுவின் மீது வைத்துவிடுங்கள். இரட்சிக்கப்படாத அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். இயேசு அவர்களை மீட்டெடுத்து முடிக்கும் வரை இளைப்பாறமாட்டார். இயேசுவின் சிலுவையின் அன்பு அவர்களையெல்லாம் மீட்டெடுக்கும். நாம் செய்யவேண்டியதெல்லாம், இடைவிடாமல் அவர்களுக்காக ஜெபித்து, பொறுமையாய் காத்திருப்பது தான். நிச்சயம் நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்களோ அவர்களை இயேசு மீட்டெடுத்துவிடுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *