நன்மை செய்யுங்கள் (Do Good )

2 தெச 3 : 13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pN5M80PeW4o

அதிக சோம்பலான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. சில நாடுகளில் காலை 10 மணிக்கு மேலாகத்தான் மக்கள் தூங்கி எழுந்திருப்பார்கள். நாமும் பல நாட்களில் 10 மணிக்கு மேலாகத்தான் படுக்கையை விட்டு எழுகிறோம். காரணம், சோம்பலை விரும்புகிறோம். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய் என்றே நீதி 20:13 கூறுகிறது. இந்தியாவில் மதிய நேரத்தில் சினிமா அரங்குகளெல்லாம் நிரம்பி வழியக் காரணம் சோம்பலுள்ள மக்கள் அதிகம் என்று ஒருவர் கூறினார். சுறுசுறுப்பாக இருப்பதற்குப் பதிலாகச் சோம்பலாக இருக்கும் மக்கள் இந்நாட்களில் சபைகளிலும் காணப்படுகிறார்கள்.

பவுல் வேலை செய்து சாப்பிடவேண்டும், முன்மாதிரியாக இருக்க வேண்டும், வேலை செய்யாதவன் சாப்பிடக்கூட கூடாது என்றெல்லாம் சொல்லியபிறகு, நன்மை செய்வதில் நாம் சோர்வுள்ளவர்களாக இருக்கக்கூடாது என்று கூறுகிறான். பேச்சை குறைப்பீர், வேலையை பெறுக்குவீர் என்ற வாசகம் நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒன்று. அதுபோல வெறும் வார்த்தைகளால் மாத்திரமே நம்மை அலட்டிக்கொள்ளாமல், பிறருக்கு நன்மை செய்வதில் நம்முடைய செயலைக் காண்பிப்பவர்களாகக் காணப்பட வேண்டும்.

ஆதி அப்போஸ்தலர்களுக்கும் ஏராளமான தேவைகள் இருந்தது. பசி இருந்தது, தாகம் இருந்தது, குளிர் இருந்தது, போதிய ஆடைகள் இல்லாமல் இருந்தார்கள். இருந்தாலும், பிறருக்கு நன்மை செய்வதில் உற்சாகமாக இருந்தார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று நீதி 19:17 கூறுகிறது. பிறருக்கு நன்மை செய்கிறவனுடைய வாழ்வில் ஆண்டவர் நன்மை செய்கிறவராக இருப்பார் என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குபவர்களாக மாத்திரமல்ல, மறுவாழ்வு கொடுக்கவும் சோம்பலில்லாமல் பிரயாசப்பட வேண்டும். பசியுள்ள ஒரு ஏழைக்கு மீன்குழம்பு கொடுப்பது நிவாரணம், அந்த ஏழைக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது மறுவாழ்வு. இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்வதில் நாம் சோர்ந்துபோகக்கூடாது. சபையில் அநேகருக்கு இந்தச் சிந்தையே இல்லாமல் இருப்பது துரதிஷ்டவசமானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக் கடவோம் என்று கலாத்தியர் 6:9, 10 கூறுகிறது. இங்கே பவுல் எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டும், விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் கூறுகிறான். ஆகையால் நாம் சோம்பலைத் தவிர்த்து பிறருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு செய்துகொடுக்கவும் செயல்படுகிறவர்களாக இருப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *