ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார் (2 தெச. 2:11,12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EXUZkmBQCqQ
தேவன் அன்புள்ளவர், அவர் ஜனங்களை மெய்யாகவே சினேகிக்கிறார். அவருடைய கண்களில் கிருபையைப் பெற்று, அவரால் இரட்சிக்கப்பட்டு, அவருடைய பிள்ளைகளாய் நாம் காணப்படுவது நமக்குக் கிடைத்த பாக்கியம். ஆண்டவர் வேதத்தின் மகத்துவங்களை நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை வாசித்து, தியானித்து, கீழ்ப்படிந்து, அதன் வெளிச்சத்தில் நாம் நடக்கும் படிக்கு விரும்புகிறார், வசனங்களின் மூலம் நம்மோடு அனுதினமும் பேசுகிறார். ஆனால் அவருடைய பிள்ளைகள், அவருடைய வார்த்தைகளை அந்நிய காரியமாய் எண்ணி, அசட்டை செய்து, கீழ்ப்படியாமல் இருளின் பிள்ளைகளைப் போல வாழும் போது, அவர்களுக்குள் கொடிய வஞ்சகத்தைக் கர்த்தர் அனுப்புகிறார். மேற்குறிப்பிட்ட வசனம் சாதாரண ஜனங்களுக்காகவோ, நற்செய்தியை இதுவரை கேள்விப்படாதவர்களுக்காகவோ எழுதப்படவில்லை. கிறிஸ்தவர்களுக்காக, அதாவது வசனத்தைக் கேட்டும், அதை வேண்டுமென்றே நிராகரித்து, தீமைகளைச் செய்து, துன்மார்க்கர்களைப் போல வாழுகிறவர்களுக்காக எழுதப்பட்டது. சில வேளைகளில் இப்படிப்பட்டவர்களை கேடான சிந்தைக்குக் கர்த்தர் ஒப்புக்கொடுப்பார் என்று ரோமர் 1:28 கூறுகிறது, சிலவேளைகளில் பொய்யின் ஆவியை அவர்களுக்குள் அனுப்புவார் என்று 1 இரா. 22:22 கூறுகிறது, சிலவேளைகளில் கள்ளத்தீர்க்கதரிசிகள் மூலம் பொய்யை அனுப்பி, பேசுகிறவனையும், கேட்கிறவனையும் நியாயந்தீர்ப்பார் என்று எசே. 14:9 கூறுகிறது. சிலவேளைகளில் சத்தியத்தை விசுவாசியாமல், பொய்யை விசுவாசிக்கத்தக்கதாய் கொடிய வஞ்சகத்தை அனுப்புவார்.
கர்த்தருடைய பிள்ளைகளோ சத்தியத்தை விசுவாசியுங்கள், அவருடைய வசனம் மட்டும் சமூலமும் சத்தியம். இந்நாட்களில் நீங்கள் சத்தியத்தை விட்டு விலகும் படிக்கு சத்துரு மறைவான கண்ணிகளை வைக்கிறான், பாதிச் சத்தியத்தையும், பாதிப் பொய்யையும் நம்பும் படிக்குச் செய்கிறான். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது, ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படு முன்னே அது வெளிப்படாது என்று 2 தெச. 2:6 கூறுகிறது. அக்கிரமத்தின் இரகசியமாகிய அந்திக்கிறிஸ்துவின் வஞ்சிக்கிற ஆவி இப்பொழுதும் செயல்படுகிறது, ஆனாலும் தடைசெய்கிற கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு காணப்படுவதினால் அவனால் பூரணமாய் செயல்படமுடியவில்லை. ஆகையால் பரிசுத்தாவியின் அபிஷேகத்திலும், அவர் எழுதிக் கொடுத்த சத்திய வசனத்திலும் உங்கள் வாழ்க்கையையும், ஊழியத்தையும் கட்டுங்கள். அநீதியான எல்லாக் காரியங்களையும் விட்டு விலகுங்கள், அநீதி எல்லாம் பாவம் என்று வேதம் எச்சரிக்கிறது. ஒருபோதும் தேவன் பொய்யை விசுவாசிக்குப்படிக்குக் கொடிய வஞ்சகத்தை அனுப்பி நம்மை நியாயந்தீர்த்து விடக்கூடாது. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்று வசனம் எச்சரிக்கிறது, இப்படிப்பட்டவர்களைக் கொடிய வஞ்சகத்திற்கு ஒப்புக் கொடுக்கிறார். ஆகையால் சத்தியத்தை விசுவாசியுங்கள், சத்தியத்திற்குக் கீழ்ப்படியுங்கள், சத்தியத்தில் நிலைத்திருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

