மரியாளை குத்திய பட்டயம் ( The sword that pierced Mary )

லுக் 2 : 35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UuiTEPt_uTk

இயேசு பிறந்து குழந்தையாக இருந்தபோது சிமியோன் இயேசுவை கரங்களில் ஏந்தி மரியாவிடம் சொன்ன வார்த்தை தான் மேற்குறிப்பிட்ட வசனம். மரியாளை வாழ்த்தி, ஆசீர்வாதமான வார்த்தையையோ, வாக்குத்தத்த வார்த்தையையே ஆசாரியன் கூறுவார் என்று ஒருவேளை மரியாள் நினைத்திருக்கக்கூடும். ஆனால் சிமியோன் மரியாளுக்கு மிகவும் கசப்பான வார்த்தையை கூறினார். சுமார் 33 1/2 வருடங்கள் கழித்து இந்த வார்த்தை நிறைவேறியது. நிறைவேறியது என்னமோ நமக்கு ஆசீர்வாதம் தான். காரணம், இயேசு சிலுவை பாதையில் சென்றதால் தான் நாம் பாவ மன்னிப்பை பெற்றோம், இரட்சிப்பை பெற்றுக்கொண்டோம், ஒருவரும் தரக்கூடாத தேவ சமாதானத்தை பெற்றுக்கொண்டோம். மறுபக்கம் மரியாளின் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போனது. இயேசுவும் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறினார். இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த மரியாளின் இருதயம் துடியாய் துடித்திருக்கும். அவள் விட்ட கண்ணீருக்கு அளவே இருந்திருக்காது. அவ்வளவாய் கண்ணீர் சிந்தி சத்தமிட்டு அழுதிருப்பாள். ஆனாலும் அவளுக்கு இது சம்பவிக்கும் என்று 33 1/2 வருடங்களுக்கு முன்பாகவே தேவ ஆவியானவர் சிமியோன் மூலமாக வெளிப்படுத்தி இருந்தார். இவற்றையெல்லாம் மரியாள் தன்னுடைய மனதில் வைத்திருந்தாள். இருந்தாலும் இயேசு மரியாளை தனியே விட்டுவிடவில்லை. யோவானிற்கு ஒரு பொறுப்பை கொடுத்தார். அது தன்னுடைய தாயாகிய மரியாளை பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற பொறுப்பை கொடுத்தார். யோவானும் அந்த பொறுப்பை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டான்.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் எல்லாருக்கும் சந்தோசமாக இருக்கும். யார் யாரெல்லாம் வீட்டிற்கு வருகிறார்களோ, அவர்களும் புதிதாக பிறந்த குழந்தையை பார்த்து சந்தோஷமடைவார்கள். ஆனால் இயேசு பிறந்து வெறும் எட்டே நாளில் ஆசாரியனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் மரியாளை எவ்வளவாய் பாதித்திருக்கும். பிள்ளையை இழப்பது என்றால் என்ன என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். தன்னுடைய தாய்க்கு முன்பாகத்தானே அவர் துடிதுடித்து மரித்தார். ஆகையால் தான் என்னவோ இயேசு பிள்ளைகளை அதிகமாய் நேசித்தார். சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள் என்று கூறினார். தேவனுடைய இராஜ்யமே சிறுபிள்ளைக்கு அடையாளமாக இருக்கிறது என்று கூறினார்.

இயேசுவின் மரணம் மரியாளின் ஆத்துமாவை பிளந்தது. இன்று நம்முடைய ஆத்துமா இயேசுவின் மரணத்தினால் தப்பிற்று. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று கூறி, இயேசு மரணத்தை ஜெயித்தார். அதனால் நம்முடைய ஆத்துமா தப்பிற்று.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *