மணவாட்டியின் வஸ்திரம் (The Bride’s Linen)

வெளி 19 : 8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dtxSALhrBVA

கல்வாரி என்னும் இடத்திற்கு வந்தவர்கள் மாத்திரமே ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் மணவாட்டி என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். திருமண வீட்டில் மணவாட்டிக்குத் தோழி, மணவாட்டியின் தாய்மாமன், மணவாட்டியின் சொந்தங்கள் அநேகர் பொதுவாகக் கலந்து கொள்வார்கள். ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் நாம் மணவாட்டியின் சொந்தங்களாக அல்ல, மணவாட்டியாக இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். உங்கள் மேல் இருக்கும் அழைப்பு இயேசுவுக்கு எங்கோ தூரத்து உறவினராக இருக்கும்படியாக அல்ல; மாறாக, நெருங்கிய உறவில் இருக்கும் மணவாட்டி என்னும் ஸ்தானத்தில் இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள்.

பொதுவாக நம்முடைய ஊர்களில் மணப்பெண் தொட்டுத் தொடரும் பட்டுப்பாரம்பரியம் என்று சொல்லுவது போலப் பட்டாடைகளை அணிவது வழக்கம். ஒவ்வொரு மணப்பெண்ணும் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு விலையுயர்ந்த ஆடைகளை வெவ்வேறு நிறங்களில் வாங்குவார்கள். ஆனால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் கைகோர்க்கும் ஒவ்வொரு மணவாட்டிக்கும் ஒரே விதமான ஆடை வழங்கப்படும். ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் மணவாட்டிக்குக் கொடுக்கப்படும் வஸ்திரம் எப்படிப்பட்டது? அது மெல்லிய வஸ்திரமாய் இருக்கும். அந்த மெல்லிய வஸ்திரம் எப்படி மற்றும் எந்த நிறத்தில் இருக்கும்? அது சுத்தமான மெல்லிய வஸ்திரம், மாத்திரமல்ல, பிரகாசமான மெல்லிய வஸ்திரம்.

நம்முடைய தேவன் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதி, விரும்பாத அசுத்தம் யாவையும் நீக்கிப்போடுகிறவர். பாவத்தை பாரத சுத்த கண்களை உடையவர். அசுத்தமுள்ளதும் தீட்டுள்ளதும் பரலோக இராஜ்யத்தை சுதந்திரிக்க முடியாது. ஆகையால் தான் ஆண்டவர் சொல்லுகிறார், ‘பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்’ என்பதாக. மாத்திரமல்ல, மணவாட்டிக்குக் கொடுக்கப்படும் மெல்லிய வஸ்திரம் பிரகாசமான வஸ்திரம். மறுரூப மலையில் இயேசுவின் வஸ்திரம் பிரகாசமாக இருந்தது. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல பூமியிலே எந்த வண்ணானாலும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது என்று மாற்கு 9:3 கூறுகிறது. இயேசுவின் வஸ்திரம் எப்படிப் பிரகாசமாக இருக்குமோ, அதே மாதிரியான வஸ்திரம் தான் மணவாட்டிக்கும் கொடுக்கப்படும்.

வெளி 19:7-ல் அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்றும், வெளி 19:8-ல் தன்னை ஆயத்தம்பண்ணின மனைவிக்கு மெல்லிய வஸ்திரம் கொடுக்கப்பட்டது என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இந்த பூவுலகில் வாழும் நாம் மணவாளனைச் சந்திக்க ஆயத்தப்பட்டால் மாத்திரமே, மணவாட்டியின் ஆடையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆயத்தமில்லாதவர்கள் புத்தியில்லாத கன்னிகைகள்; ஆயத்தமாய் இருப்பவர்கள் புத்தியுள்ள கன்னிகைகள். என்னுடைய விருப்படி எப்படிவேண்டுமானாலும் நான் வாழ்வேன் என்பவர்கள் ஆயத்தமாகாதவர்கள், அவர்கள் புத்தியில்லாதவர்கள் என்றே வசனம் கூறுகிறது. தேவஜனங்களே, மணவாட்டியின் வஸ்திரத்தை வாங்கிக்கொள்ளப் பாத்திரமான ஜீவியம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தைப் பெற்றுகொள்ளுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *