2 தீமோ 2 : 1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/yFdij1IG2jw
கிறிஸ்துவ வாழ்வில் ஏன் தோல்வி வருகிறது? காரணம் பலம் குன்றியிருப்பதால்தான் தோல்வியை விசுவாசிகள் சந்திக்கிறார்கள். போராட்டம் வரும்போது நாம் கர்த்தரிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட வேண்டும். அதுபோல கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்பட வேண்டும் என்று பவுல் தன்னுடைய விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறுகிறான். பாவம் செய்யும்போது ஒரு மனிதன் வீழ்ச்சியடைகிறான். அந்தப் பாவத்தை மேற்கொண்டு ஜெயமுள்ள ஜீவியம் வாழவே கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கிருபையை கொடுக்கிறார். தேவன் தரும் கிருபை பாவங்களை மேற்கொள்ள மாத்திரமல்ல, நாம் திறம்பட வேலை செய்யவும் கிருபை வேண்டும். அதைத்தான் சகரியா 4:7 ல் ஆவியானவர் சொல்லுகிறார், ‘பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக’ என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார் என்பதாக. பவுல் ஒரு சில இடங்களில் மாத்திரமல்ல, அநேக இடங்களில் தேவ கிருபையை முன்னிறுத்துகிறவனாகக் காணப்பட்டான். 1 கொரி 15:10-ல் பவுல் கூறுகிறான், ‘ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது’ என்பதாக.
எப்படி கிருபையில் பலப்படுவது? ஆதி அப்போஸ்தலர்களாகிய அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது (அப் 4:33). காரணம் முந்தின வசனம் கூறுகிறது, விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள் என்பதாக. இன்று சபைகளில் இந்த ஒருமனம் பறிபோய்விட்டது. நிறம், பதவி, ஜாதி போன்ற பாகுபாடுகளால் பிரிந்துபோய்விட்டதால்தான் சபை கிருபையை இழந்து தவிக்கிறது. மாத்திரமல்ல, தாழ்மையோடு இருந்தால் நாம் கிருபையில் பலப்படலாம். ஆகையால் தான் யாக்கோபு கூறுகிறார், ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’ (யாக் 4:6). அடுத்து ஸ்தோத்திரம் செலுத்தும்போது நமக்கு கிருபை பெருகும் என்று தேவன் வாக்கு கொடுக்கிறார். தேவன் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து நன்றி சொல்லுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் நன்றி சொல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு கிருபை பெருகும். கிருபையை மட்டும் பெற்றுக்கொண்டுவிட்டீர்களென்றால், நீங்கள் எதையும் சாதிக்கலாம். ஆகையால் தேவ கிருபையில் பலப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

