தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன், அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது (1 தீமோ. 3:15).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6xWXK1MdYew
சபை என்பது ஆவிக்குரிய குடும்பம், அந்தக் குடும்பத்திற்கு இயேசு தலைவராகவும், தகப்பனாகவும் காணப்படுகிறார். அங்கே காணப்படுகிற ஒவ்வொரு அங்கத்தினர்களும் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும், இயேசுவின் பிள்ளைகளாகவும் காணப்படுகிறார்கள். அன்பும், சகோதரத்துவமும், பரஸ்பர மரியாதையும், ஒருவரையொருவர் கனம் பண்ணுவதும், விருந்தோம்பலும், ஒருமைப்பாடும் சபையில் காணப்பட வேண்டும். முறுமுறுப்புகளுக்கும், கசப்புகளுக்கும், வெறுப்புகளுக்கும், அரசியல் பண்ணுவதற்கும், கோஷ்டிகளை உருவாக்குதற்கும், மாம்சீகக் காரியங்களுக்கும் தேவனுடைய வீட்டில் இடமில்லை.
தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய முறைமை என்று ஒன்று காணப்படுகிறது, அதை நீ அறிய வேண்டும் என்று விசுவாசத்தில் தன் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு தகப்பனைப் போல பவுல் ஆலோசனை கூறுவதைப் பார்க்கமுடிகிறது. இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் மிகவும் பொருந்துகிற ஆலோசனையாகவும் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய ஆதினத்தில் காணப்படுகிறவற்றில் சபை முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சபையை இரத்தம் சிந்தி சம்பாதிக்கும் படிக்கு இயேசு பூமியில் வந்தார், இனி சபையைச் சேர்த்துக்கொள்ளும் படிக்குத் துரிதமாய் வரப்போகிறார். ஆகையால் தேவனுடைய வீட்டில் நீங்கள் எப்படிக் காணப்பட வேண்டும் (How to behave in the house of God) என்பதை அறிந்திருக்க வேண்டும். பூமியில் காணப்படுகிற எல்லா நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் நன்னடத்தை விதிகள் காணப்படுகிறது. அவைகள் எல்லாம் பூமியோடு ஒழிந்து போகிறவையும், நிலையுற்றதுமாய் காணப்படுகிறது. ஆனால் நம்மை நித்திய வாழ்வுக்கு நேராய் நடத்துகிற சபைகளில் சகல நல்லொழுக்கத்தோடு நாம் காணப்படுவது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மணவாளனாகிய இயேசுவையும், மணவாட்டி சபையையும் பிரிக்க முடியாது. மணவாட்டி கூடிவருகிற இடங்களில், பொற்கச்சை நிலையங்கி தரித்தவராய் பிரதான ஆசாரியனாய் மணவாளனாகிய இயேசு வந்து உலாவுவார். அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம் என்று வெளி. 1:12,13,20ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் எல்லாவிதப் பயபக்தியோடும், பரிசுத்தத்தோடும், தாழ்மையோடும், வாஞ்சையோடும், உள்ளான பூரண மகிமையோடும் இயேசுவை சந்திக்குப்படிக்கு அவருடைய வீட்டிற்கு வாருங்கள். அப்பொழுது அவருடைய வீட்டின் நன்மையினால் உங்கள் ஒவ்வொருவரையும் திருப்தியாய் ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

