ஆபகூக் 2 : 3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MpoRbKoqBXQ
தரிசனம் என்பது எதிர்காலத்தைப் பற்றி ஆவிக்குரிய கண்களால் பார்ப்பதுதான் தரிசனமாகக் காணப்படுகிறது. கர்த்தர் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார் (1 சாமு 3:21) என்ற வசனத்தின்படி, வார்த்தையினால் பிரதானமாகத் தரிசனத்தைத் தருவார். ‘சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்’ என்று யாத் 6:3-ல் கர்த்தர் நம்முடைய முற்பிதாக்களுக்குத் தரிசனமானார்.
பழைய ஏற்பாட்டில், யோவேல் தீர்க்கதரிசி இந்தத் தரிசனத்தைப் பற்றிச் சொல்லும்போது, ‘அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்’ என்று ஆவியானவர் திருவுளம்பற்றார் (யோவே 2:28). புதிய ஏற்பாட்டில், கடைசிநாட்களில் ‘நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்’ என்று அப் 2:17 கூறுகிறது. இந்த இரண்டு வசனங்களில் இருக்கும் ஒரு வித்தியாசத்தைப் பாருங்கள். யோவேல் புஸ்தகம், வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள் என்றும், அப்போஸ்தலர் நடபடிகள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள் என்றும் கூறுகிறது. காண்பதற்கும் அடைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு மேஜையில் உணவு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் அதைச் சாப்பிடவில்லை என்றால் பார்த்தும் பிரயோஜனம் இல்லை. மோசே கானானைப் பற்றி கேள்விப்பட்டான், தன்னுடைய கண்களினால் பார்த்தான், ஆனால் கானானை அடைந்துகொள்ளவில்லை, அதைச் சுதந்தரிக்கவில்லை. நாம் ஒவ்வொருவரும் தரிசனத்தைக் காண்பவர்களாக மாத்திரமல்ல, தரிசனத்தை அடைபவர்களாகக் காணப்பட வேண்டும். தரிசனத்தைக் கொடுத்தவர், தரிசனத்தை நிறைவேற்றி முடிப்பார். உங்களில் நற்கிரியையைத் தொடங்குபவரும் கர்த்தர் தான், அந்த நற்கிரியையை நிறைவேற்றி முடிப்பவரும் கர்த்தர் தான். ஆகையால் உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்த தரிசனம் பொய்ச்சொல்லாது. அது தாமதித்தாலும் நிச்சயம் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

