ஓர் உண்மையான மதிப்பீடு (A honest appraisal)

உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்ளூ நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி. 2:2,3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MDa-h3uunbk

ஒவ்வொரு பெரிய நிறுவனங்களும் வருடந்தோறும்  தங்கள் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களுடைய தகுதி, திறமை, செயல்பாடுகள் எப்படிக் காணப்படுகிறது என்பதைப் பற்றிய மதிப்பீடு செய்வது வழக்கம். அதின் அடிப்படையில் ஊதிய உயர்வுகளையும், இதரப்படிகளையும் கொடுப்பார்கள். அவர்கள் கூட சிலவேளைகளில் பட்சபாதம் காட்டி தங்களோடு பழகினவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று தகுதியில்லாதவர்களுக்கு உயர்வுகளைக் கொடுப்பார்கள். கர்த்தர் சபைகளையும், விசுவாகிகளையும் மதிப்பீடு செய்வதைக் குறித்து வெளிப்படுத்தல் 2 மற்றும் 3ம் அதிகாரங்களை வாசிக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது. உலக நிறுவனங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், நமது ஆண்டவர் பட்சபாதம் காட்டுவதில்லை, அவருடைய கரத்தில் காணப்படுகிற தராசு ஒரு நாளும் பொய்சொல்லுவதில்லை, அது சுமுத்திரையானது. அவர் ஒவ்வொருவரையும் சீர்தூக்கிப் பார்க்கிறவர். சுமுத்திரையான தராசிலே என்னை நிறுத்துப் பாரும் என்று யோபு பக்தன் கூறினான், ஆண்டவர் அவனை நிறுத்துப் பார்த்து நிறைவுள்ளவனாய் கண்டதினால் அவன் இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாய் கொடுத்தார். பெல்ஷாத்சார் என்னும் பாபிலோனிய ராஜாவை நிறுத்துப் பார்த்தார், அவன் குறைவுள்ளவனாய்க் காணப்பட்டதினால் அவனுக்கு அன்றே முடிவு உண்டானது.

எபேசு சபை, அப்போஸ்தலனாகிய பவுலுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தில் நிறுவப்பட்ட சபை. அங்கே யோவான்ஸ்நானகனுடைய சீஷர்களில் பன்னிரண்டு பேரைக் கண்டு அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார், அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள் என்று அப். 19:1-7 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை  சோதித்து   பொய்யரென்று   கண்டறிந்ததையும்,  சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், இயேசுவுக்காக  இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் கர்த்தர் கண்டு அவர்களை மெச்சினார், அது அவர்களுடைய நிறைவாய்க் காணப்பட்டது. ஆனால்  பின்னாட்களில் ஆதியில் கொண்டிருந்து அன்பை விட்டார்கள், ஆகையால் கர்த்தர் அதை அவர்களுடைய குறையாய்க் கண்டார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்க்கிறவர். உங்கள் நிறைகளையும், குறைகளையும் அறிந்திருக்கிறவர். ஆகையால் குறைவுகளை ஆண்டவர் சுட்டிக்காட்டும் போது, முறுமுறுக்காமல் ஏற்றுக்கொண்டு, ஆண்டவரிடம் மன்னிப்பைப் பெற்று, ஒப்புரவாகி விடுங்கள். நிறைவான இயேசு உங்களில் வாசம் செய்யும் படிக்கு நீங்கள் அனுமதிக்கும் போது, உங்கள் குறைவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு விலகிவிடும். ஆண்டவர் உங்களை மதிப்பீடு செய்யும் போது, நீங்கள் நிறைவுள்ளவர்களாய் காணப்படுவீர்களானால் இரட்டிப்பான நன்மைகளைத் தந்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae