எனது இலக்கு (My Goal)

ரோமர் 15 : 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rcwYHfLeOD4

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. சிலருக்குத் தன்னுடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. சிலர் விளையாட்டுத்துறையில் முதலிடத்தில் வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. சிலருக்கு மிகப்பெரிய பணக்காரனாக மாற வேண்டும் என்ற நோக்கமும் இருக்கிறது. பவுலுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கம் சொல்லப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அது அவனுடைய இருதய துடிப்பாக இருந்தது. அதன் விளைவாகத்தான் இன்று ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ நாடுகளாக இருக்கக் காரணம். “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” (1 கொரி 9:16) என்று பவுல் கூறுகிறான்.

இப்படி சொல்லப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கச் சென்றவர்கள் நமக்கு முன்பாக மேகம் போன்ற திரளான சாட்சிகளாய் இருக்கிறார்கள். டேவிட் லிவிங்ஸ்டன் என்ற ஊழியக்காரர் சுவிசேஷம் சொல்லப்படாத ஆப்பிரிக்க தேசத்தை அசைத்தார். ஹட்சன் டெய்லர் என்ற தேவ மனுஷன் சுவிசேஷம் சொல்லப்படாத சீனா தேசத்தில் சுவிசேஷத்தை வித்திட்டார். வில்லியம் கேரி சுவிசேஷம் சொல்லப்படாத இந்திய தேசத்திற்கு வந்து அநேகருடைய உள்ளத்தில் வெளிச்சம் உண்டாக காரணமாய் இருந்தார்.

இன்றைக்கு அநேக சுவிசேஷகர்கள் வளர்ந்த சபைக்குச் சென்று மீண்டும் மீண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், அவர் கிருபையுள்ளவர், அவர் அன்பானவர் என்று போடப்பட்ட அஸ்திபாரத்தின் மேலேயே கட்டடத்தை கட்ட முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தில் சந்திக்கப்படாதவர்கள், தொடப்படாதவர்கள், சபைக்கு வராதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் என்று கோடிக்கணக்கான ஜனங்கள் உண்டு. அதை நம்முடைய கவனத்தில் கொண்டு நம் ஒவ்வொருவருக்கும் மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி இலக்கு இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கே போக வேண்டும் என்ற சுயநோக்கத்தோடு செயல்படுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக நாம் இருக்கக் கூடாது. இந்திய தேசத்தை சற்று கண்முன் கொண்டுவந்து பாருங்கள். இந்த தேசம் மற்ற தேசங்களிலிருக்கும் சுமார் 200 தேசத்திற்குச் சமம். நம்முடைய தேசத்தின் பல மாநிலங்கள், உலகத்தின் பல தேசங்களை விட பெரியவைகள். தமிழ்நாட்டிலிருக்கும் மக்கள் தொகை, பல தேசங்களைக் காட்டிலும் அதிகம். இவ்வளவு பெரிய தேசத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு இன்னும் சுவிசேஷம் சொல்லப்படவில்லை. அறுப்பு மிகுதியாய் இருக்கிறது. அறுவடைக்கு ஆயத்தமாகுங்கள். உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தில் பிரதானமானதாக அப்போஸ்தலனாகிய பவுலைப் போல கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *