வானாதி வானங்கள் கொள்ளாதவர் (Highest Heaven cannot contain him)

I இராஜாக்கள் 8:27 தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5ZPJHrSUj9s

நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், வானத்தின் எல்லை அவ்வளவுதான் என்று எண்ணிவிடக்கூடாது. பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது. சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று எண்ணிப்பாருங்கள். நம் கண்களுக்குப் புலப்படும் சமீபமான நட்சத்திரத்தின் தூரம் 40,000 பில்லியன் கிலோ மீட்டர் என்று சொல்கிறார்கள். ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சந்திரனை பாதி செகண்டிற்குள் அடைந்துவிடலாம். ஒரு சில நட்சத்திரங்களை அடைய சுமார் 6,000 மில்லியன் ஒளியாண்டு பயணம் தேவை என்று அறிவியல் ஆய்வு கூறுகிறது.

இத்தனை மகத்துவமுள்ள விண்ணகத்து கோள்கள் தங்கள் தங்கள் ஓட்டப்பாதையில் எத்தனை நேர்த்தியாய் பிழையேதுமில்லாமல் சுற்றி வருகின்றன என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிற வானங்கள், வானாதி வானங்கள் கொள்ளாத தேவன் தான் நம்முடைய தேவன். “வானம் என்னுடைய சிங்காசனம் பூமி என்னுடைய பாதபடி” என்று கூறியவர். அவ்வளவு பெரிய மகத்துவமுள்ள தேவன் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம் செய்வது மிகப்பெரிய இரகசியம் என்று பவுல் கூறுகிறான். காண்கிற வானத்தின் விரிவு விசாலமாயுள்ளது. மனிதனோ எத்தனை சிறியவன். இதை அறிந்து தான் தாவீது ராஜா சொல்லுகிறான் , “நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்” என்பதாக.

ஒரு பொருளின் மதிப்பை அதன் அளவை வைத்து மதிப்பிட முடியாது என்று சொல்லுவார்கள். ஒரு கோடீஸ்வரனுக்கு ஏராளமான ஏக்கர்கள் நிலம் இருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய நிலத்தைக் காட்டிலும் வீட்டில் இருக்கும் அவனுடைய சிறு குழந்தையே அவனுக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷம். இதைப் போலவேதான் தேவனுக்கும் உள்ளது. வானங்களும் வானாதி வானங்களும் பரந்து விரிந்ததாய் இருக்கலாம். நட்சத்திரங்கள் மகாப் பெரிய அளவுடையதாக இருக்கலாம். ஆனால் தேவனோ, தான் படைத்த எதைக் காட்டிலும் மனுஷனையே அதிகமாய் நேசித்து அக்கறை காட்டுகின்றார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற நம்முடைய முற்பிதாக்கள் தேவனை சர்வ வல்லமையுள்ளவராக கண்டார்கள். கிதியோன் தேவனை சமாதானம் தருகிற யெகோவா ஷாலோமாக கண்டான். ஆகார் தன்னை காண்கிறவராக கர்த்தர் இருக்கிறார் என்று கண்டாள். அதுபோல சாலொமோன் ஞானி தேவனை வானங்களும் வானாதி வானங்களும் கொள்ளாதவர் என்ற வெளிப்பாட்டோடு பார்த்தான். ஆகையால்தான் சாலொமோன் சொல்லுவான் எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும் (2 நாளா 2:5) என்பதாக. அவ்வளவு பெரிய தேவன் உங்களுக்குள் வாசம் செய்வது சிலாக்கியத்திலும் மிகப்பெரிய சிலாக்கியம், பாக்கியத்திலும் பெரிய பாக்கியம், கிருபையிலும் பெரிய கிருபை என்று சொல்லிக்கொண்டே போகலாம். உங்களுக்குள் வாசம் செய்யும் தேவன் மிகவும் பெரியவர். ஆகையால் உங்கள் வாழ்க்கையில் அவர் செய்யப்போகும் காரியங்களும் மிகவும் பெரியவைகளாகவே இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *