ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது (கொலோ. 3:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/g2_zs9iW8_o
தேவ ஜனங்கள் உங்களை ஆண்டவருக்குள் மறைத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். யோவான் ஸ்நானகனைப் போல இயேசு என்னில் பெருக வேண்டும், என்னுடைய சுயம் மறைய வேண்டும் என்று விரும்புங்கள். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நானல்ல, கிறிஸ்து என்று அறிக்கையிட்டு இயேசுவை வெளிப்படுத்துங்கள்;. உங்களை இயேசுவின் காயங்களுக்குள் மறைத்து, அவருடைய மகிமை உங்கள் மூலம் வெளிப்பட உங்களை அர்ப்பணியுங்கள். இந்நாட்களில் காணப்படுகிற ஜனங்கள் தங்களைப் பிரபலப்படுத்துவதற்கு விரும்புகிறார்கள். அதற்காகவே சத்துரு பல சமூக ஊடகங்களை நிறுவியிருக்கிறான். அனேகர் முகநூல் மற்றும் பல ஊடகங்களிலும் தங்களைப்பற்றி அனுதினமும் பதிவிடுதலை வழக்கமாய் கொண்டிருக்கிறார்கள். அறியாமையினால் உலகத்தின் ஜனங்கள் அப்படிப்பட்டவற்றில் மூழ்கிக் காணப்படும் போது, ஊழியர்களும் விசுவாசிகளும் கூட தங்களைப் பிரபலப்படுத்துவதற்கு, அப்படிப்பட்டவர்களாய் காணப்படுவது பரிதாபத்திற்குரியது. தங்களுடைய புகைப்படங்களையும், வேதாகம வினியோகங்களையும், ஞானஸ்நானத்தையும், ஊழியங்களையும் பொதுவெளியில் பிரபலப்படுத்துவது, சுவிஷேசத்திற்கு எதிராய் காணப்படுகிறவர்களிடமிருந்தும், அரசாங்கங்களிலிருந்தும் பல எதிர்ப்புகளையும், தடைகளையும் கொண்டு வருகிறது, அவைகள் கர்த்தருடைய பணி பரவிச் செல்லுவதற்கு இடையூறாக மாறிவிடுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களை மறைத்து வாழுங்கள். இயேசுவும் கூட அவருடைய பன்னிரண்டாவது வயதிலிருந்து முப்பதாவது வயது வரைக்கும் அவரை மறைத்து வாழ்ந்து வந்தார். அவருடைய பன்னிரண்டாவது வயதில் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் பேசுகிறதைக் கேட்டு, அவர்களிடம் கேள்விகளைக் கேட்டார். அவர்கள் நடுவில் அவர் பேசின வேளையில், அவருடைய பேச்சைக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். அவரைத் தேடி வந்த பெற்றோர்களிடம், நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். பன்னிரண்டாவது வயதில் பிதாவுக்குரிய காரியங்களைச் செய்தவர், அடுத்த பதினெட்டு வருடங்களும் கூட தச்சுத் தொழிலைச் செய்தாலும், பிதாவுக்கடுத்த காரியங்களையும் செய்திருக்கக் கூடும். அவைகள் வேதத்தில் எழுதப்படாதபடிக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் சவுலை ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார். பின்பு சாமுவேலை நோக்கி, நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா, பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன், அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப் போவேன், சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான், அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிட வந்தேன் என்று உன்னை மறைத்துக் கொண்டு செல் என்பதாகக் கூறினார். இந்நாட்களில் நாமும் நம்மை மறைத்து வாழ்வதற்குக் கர்த்தரிடத்தில் கிருபையைக் கேளுங்கள். பிசாசு மேட்டிமைகளை விதைத்து, நம்முடைய சுயத்தை வெளிப்படுத்தத் தூண்டுவான். அவைகள் நமக்குக் கண்ணியாக மாறிவிடும். அவனுடைய தந்திரங்கள் நாம் அறியாதவை அல்ல. ஆகையால் உங்களைக் கிறிஸ்துவுக்குள் மறைத்து, அவரை வெளிப்படுத்துங்கள். அப்போது, கர்த்தர் உங்கள் மேன்மைப்படுத்தி, பிரபலப்படுத்தி, கனப்படுத்தி உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae
———————————-

