கர்த்தருடைய பணிக்கு முயன்று நில்லுங்கள் (Devote yourselves for God’s work)

ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை, அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன், என் வேலைக்காரரனைவரும்  கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள் (நெகே. 5:16).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oGCzWqy5jCQ

அர்த்தசஷ்டா ராஜாவின் நம்பிக்கைக்குரிய பான பாத்திரக்காரனாய்  காணப்பட்டவன் நெகேமியா. அவன் உயர்ந்த பதவியில் காணப்பட்டிருந்தும், சுமார் ஆயிரம் மைல் தொலைவில் காணப்பட்ட தன்னுடைய ஜனங்களையும், தேசத்தையும், பட்டணத்தையும், ஆலயத்தையும் குறித்த கரிசனை உடையவனாய் காணப்பட்டான். ஒருநாள் அவனுடைய சகோதரரில் ஒருவனாகிய ஆனானி மற்றும் வேறுசிலர் யூதாவிலிருந்து  பெர்சிய ராஜ்யத்திற்கு வந்தார்கள். அவர்களிடம் நெகேமியா தன் ஜனங்களையும் தேசத்தையும் குறித்த காரியங்களை விசாரித்தான். இந்நாட்களில் வெளிநாடுகளில் உயர்ந்த நிலையில் காணப்படுகிறவர்கள் தங்கள் ஜனங்களைக் குறித்தும், தாய்நாட்டைக் குறித்து, அங்கே காணப்படுகிற சபைகளின்  நிலைகளைக் குறித்தும் விசாரித்து அறிகிறவர்களாகவும், உதவுகிறவர்களாகவும்   காணப்பட வேண்டும்.  கர்த்தரிடத்திலிருந்து  நீங்கள் பெற்ற நன்மைகள்  உங்களைக்  கரிசனையற்றவர்களாய் மாற்றி விடக்கூடாது.  

 நெகேமியாவின் சகோதரனாகிய ஆனானியும் மற்றவர்களும் சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அனுபவிக்கிறார்கள், எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்று கூறினார்கள். அந்தச் செய்தியானது நெகேமியாவை மிகவும் பாதித்தது. அவன் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே இந்நாட்களில் நாம் கேட்கிற ஒவ்வொரு துற்செய்திகளும் ஜெபக்குறிப்புகளாய் மாறட்டும், நம்மைச் செயல்படும் படிக்கு அது செய்யட்டும், அதுபோல நற்செய்திகளைக் கேட்கும்போது கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். 

அலங்கத்தையும், வாசல்களையும் எடுத்துக் கட்டுகிற பணிக்கு நெகேமியா புறப்பட்டான்.  கர்த்தருடைய வேலையைச் செய்ய யாராகிலும் போகட்டும் என்று நினைக்கிறவர்களின் நடுவில்  நெகேமியா நமக்கொரு பாடமாய் காணப்படுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய பணி கடினமானதுதான் ஆனால் கனமானது, அது சுமைதான், ஆகிலும் அது சுகமான சுமை என்பதை அறியுங்கள். ஆகையால் ஏதாகிலும் ஒரு விதத்தில்  அவருக்காகச் செயல்படுங்கள்.  நெகேமியா, ராஜாவின் அனுமதியோடு ஆயிரம் மைல் பயணம் செய்து எருசலேமுக்கு வந்தான். அவன் ஜனங்களோடு சேர்ந்து அலங்கத்தையும் வாசல்களையும் எடுத்துக் கட்டத் துவங்கின நாளிலிருந்து பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது, ஓரோனியனான  சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியாவும், அரபியனான கேஷேமும் பரியாசம் பண்ணி,   நிந்தித்து மிகவும் எதிர்த்து நின்றார்கள். புறஜாதிகளின் எதிர்ப்பு ஒருபுறமிருக்கு, செமாயா என்ற தீர்க்கதரிசியானவனும்,  நொவதியாள் என்ற தீர்க்கதரிசியானவளும், மற்ற கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டவர்களும் கூட கைக்கூலி வாங்கிக் கொண்டு பொய் தீர்க்கதரிசனம் சொல்லி பணியை நிறுத்துவதற்கு முயன்றார்கள். இந்நாட்களிலும் கூட கர்த்தருடைய பணிக்குப் புறஜாதிகள் எதிர்த்து நிற்கிறதைப் போல, சபைக்கு உட்பட்டவர்களும் சத்துருவோடு சேர்ந்து எதிர்த்து நிற்பது ஆச்சரியமான உண்மையாய் காணப்படுகிறது. ஆனால் இவை  ஒன்றினாலும்  நெகேமியா பின்வாங்கிப் போகாதபடிக்கு, கர்த்தருடைய பணிக்கு அவன் முயன்று நின்றான். அவனுடைய அர்ப்பணிப்பையும்  முழு முயற்சியையும் கண்ட கர்த்தர், அவனைக் கொண்டு   என்ன செய்யும்படி தீர்மானித்தாரோ, அதை அவனை வைத்தே செய்து முடித்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் கர்த்தருடைய பணிக்கு முயன்று நில்லுங்கள், முழுமனதோடும் முழு பலத்தோடும் செயல்படுங்கள்.  அப்பொழுது கர்த்தர் உங்கள் அன்பின் பிரயாசத்தை நினைத்தருளி உங்களுக்கு அதற்குரிய பலன்களைத் தந்து, உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *