விசுவாச பரீட்சை (Test of Faith)

யாக் 1:2,3 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/r9JkHtk7v7Q

உங்கள் விசுவாசம் உண்மையானதாக இருந்தால், நீங்கள் சோதனைகளைச் சந்திக்கும்போது மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் விசுவாசம் உண்மையானதா இல்லையா என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளும்படி, தேவன் உங்களை இப்பொழுதே சில சோதனைகளுக்குள் கொண்டுவருவது நல்லது. நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், வீட்டைக் கட்டி முடித்த பிறகு வராமல், அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருக்கும்போதே பூகம்பம் வந்தால் அது நல்லது அல்லவா? அஸ்திவாரம் ஆட்டம் கண்டால், அதை நீங்கள் உடனடியாகச் சரிசெய்துவிடலாம். ஆகையால், உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சோதனைகளைச் சந்திப்பது நல்லது. நீங்கள், “நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன் ” என்று சொல்லலாம். ஆனால், உங்களுக்குச் சிறிதளவு நிதிச் சிக்கல் ஏற்படும்போது, ​​நோய்வாய்ப்படும்போது, மனிதர்களிடம் எதிர்ப்பு வரும்போது, நீங்கள் கவலைப்படவும் குறை கூறவும் தொடங்குகிறீர்கள். இந்தச் சோதனைகள் அனைத்தும் உங்கள் விசுவாசம் உண்மையானதல்ல என்பதை உங்களுக்கு நிரூபிக்கும்.

மாத்திரமல்ல, சோதனைகள் நம்மிடம் பொறுமை எனும் நற்பண்பையும் உருவாக்குகின்றது . நமது விசுவாசத்துடன் நமக்கு எப்போதும் பொறுமை அதாவது சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இந்தச் சகிப்புத்தன்மை உங்களுக்கு இருந்தால் , நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி செய்கிறது (யாக் 1:4). ஏதேனும் ஒரு சோதனையின் மூலம் உங்கள் விசுவாசம் உண்மையானதல்ல என்பதை நீங்கள் கண்டறிந்தால் மனச்சோர்வடையாதீர்கள். அதை உங்களுக்குக் காட்டியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

1 பேதுரு 1:7-ல் அப்போஸ்தலனாகிய பேதுரு, அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் என்று கூறுகிறார். பூமியின் ஆழத்திலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படும்போது அது தூய்மையானதாக இருப்பதில்லை. அதைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழி, அதை நெருப்பில் போடுவதுதான். சோப்பு மற்றும் தண்ணீரால் தேய்த்து தங்கத்தைத் தூய்மைப்படுத்த முடியாது. அது அழுக்கை மட்டுமே நீக்குகிறது. ஆனால் தங்கத்தில் கலந்திருக்கும் உலோகங்களை அகற்ற, அதை நெருப்பில் போட வேண்டும். அப்போது அதில் உள்ள கலப்புலோகங்கள் அனைத்தும் உருகி, தூய தங்கம் வெளிவருகிறது. நீங்கள் கடந்து செல்லும் சோதனைகள் நெருப்புப் போல இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் உள்ள அசுத்தமான காரியங்களை அகற்றுவதே அதன் ஒரே நோக்கம்.

தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் சோதனைகளைச் சந்திக்க அனுமதிக்கிறார். நாம் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது, ​​நம் வாழ்வில் அவர் அனுமதித்த எந்தவொரு சோதனையிலும் தேவன் ஒரு சிறு தவறுகூடச் செய்யவில்லை என்பதை நாம் கண்டுகொள்வோம். நம் வாழ்வில் அவர் அனுமதித்த ஒவ்வொரு சோதனையும், நம்மைப் பொன்னைப் போலப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே இருந்தது என்பதை அந்த நாளில் நாம் கண்டுகொள்வோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *