நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன், அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது (1 தீமோத்தேயு 3:14,15)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cOVwx45lPNE
அப்போஸ்தலனாகிய பவுல், விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, தேவனுடைய வீட்டில் நீ எப்படி நடக்கவேண்டும் என்ற வகையை அறிந்து கொள் என்பதாக ஆலோசனை கூறினான். இந்நாட்களிலும் கர்த்தருடைய ஊழியர்களும், விசுவாசிகளுக்கும் கர்த்தருடைய சபையில் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிந்து, அதன்படி நடப்பது நல்லது. நம்முடைய நடக்கைகள் பொருத்தமானதாகக் காணப்படும் பொழுது, சபையில் இன்னும் அதிக நல்லொழுக்கமும், கீழ்ப்படிதலும், தாழ்மையும், கிறிஸ்துவின் சிந்தையும் வெளிப்படும்.
பவுல், மக்கெதோனியாவுக்குப் போகும்போது தீமோத்தேயுவை எபேசு பட்டணத்திலிருந்து ஊழியம் செய்யும் படிக்கு அவனை அங்கே விட்டுவிட்டான். பின்னாட்களில் நிருபங்களை எழுதி, அவனுடைய சுபாவங்கள் எப்படிப்பட்டதாய் காணப்பட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தான். தீமோத்தேயு அவைகளைப் பின்பற்றி கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ததினால், எபேசு சபையின் மேய்ப்பனும், கண்காணியுமாய் கர்த்தர் அவனை உயர்த்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே, சபை என்பது தேவனுடைய வீடாய், ஜீவனுள்ள தேவனுடைய வீடாய், சத்திய வசனத்திற்குத் தூணும் ஆதாரமுமாய்க் காணப்படுவதினால் உங்கள் நடக்கைகள் யாவும் அதற்குப் பொருத்தமானதாய்க் காணப்பட வேண்டும். இயேசு சபையை சம்பாதிக்கும் படிக்கு அதற்காகக் கொடுத்த கிரயம் மகாப் பெரியது. தன்னுடைய இரத்தத்தை, அதாவது தன் ஜீவனைக் கல்வாரிச் சிலுவையில் ஊற்றிக் கொடுத்தார். சாலொமோன் ஞானி கர்த்தருக்கு என்று மகிமையான தேவாலயத்தைக் கட்டினான். ஜனங்கள் தேவாலயத்திற்குப் போகும்போது எப்படிக் காணப்பட வேண்டும் என்று அவன் எழுதும் போது, நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக என்று பிரசங்கி 5:1,2ல் எழுதினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, சரியான நேரத்திற்குக் கர்த்தருடைய வீட்டிற்கு மன மகிழ்ச்சியோடு வாருங்கள். பரிசுத்தமானது நித்திய நாளாக அவருடைய ஆலயத்தின் அலங்காரமாயிருப்பதினால் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருவரையொருவர் கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள். உங்கள் அகந்தைகளையும், அகம்பாவங்களையும் விட்டுவிட்டு தாழ்மையோடு கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். முறுமுறுக்காதிருங்கள், ஒருமனதைக் காத்துக்கொள்ளுங்கள், இருநினைவுகளினால் குந்திக்குந்தி நடக்காதிருங்கள். இப்படிப்பட்ட அனேகக் காரியங்கள், கர்த்தருடைய வீட்டின் பொருத்தமான நடத்தை என்பது நீங்கள் புரிந்து கொள்ளும்போது, கர்த்தர் உங்களுக்கு ஆலயத்தின் நன்மைகள் அனைத்தையும் தந்து ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

