கலியாண விருந்து (Marriage Supper)

வெளி 19 : 9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hu-62LvTjSs

பொதுவாகக் கலியாண விருந்து என்றாலே ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்ததாகக் காணப்படும். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து எந்த அளவிற்குச் சந்தோஷமும் குதூகலமும் நிறைந்ததாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கலியாண வீட்டுச் சாப்பாடு என்றால் எல்லாரும் ஆர்வமாகச் செல்வார்கள். பலவகையான கூட்டுப் பொரியலோடு வயிறாரச் சாப்பிட்டு வெளியே வந்தவர்கள், கலியாண விருந்து எப்படி இருந்தது என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். சில கலியாண வீட்டு விருந்து சுவையாக இருந்தது என்றும், சில கலியாண வீட்டு விருந்து சுவையாக இல்லை என்றும் சொல்வதுண்டு. இதுநாள் வரையில் நீங்கள் கலந்துகொண்ட திருமண விருந்துகளில், எந்தத் திருமணத்தில் விருந்து மிகவும் நன்றாக இருந்தது என்றும், எந்தத் திருமண விருந்து குறைவுள்ளதாகவும் சுவையற்றதாகவும் இருந்தது என்றும் கேட்டால், அதை இலகுவாகச் சொல்லிவிடுவீர்கள். காரணம், பொதுவாக நன்றாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் கலியாண வீட்டு விருந்தை யாரும் இலகுவாக மறப்பதில்லை. அப்படியென்றால் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்து எவ்வளவு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் கடந்த ஆண்டில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகனின் திருமணம் நடைபெற்றது. பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திருமண விருந்து அந்த கலியாண வீட்டில் இருந்தது. வந்த யாவருக்கும் அது மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்திருக்கும். இதைவிடப் பல மடங்கு நித்திய மகிழ்ச்சியோடு நடைபெறப்போகும் திருமண விருந்து தான் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து.

கானாவூர் கல்யாண வீட்டில் குறைவை விரும்பாத தேவன், அவருடைய திருமண விருந்தில் குறைவு இருக்கும்படி அனுமதிப்பாரா? குறையில்லாத கலியாண விருந்தாக ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து காணப்படும். இந்த உலகில் நாம் வாழும்போது நம்முடைய சத்துருவுக்கு முன்பாக நமக்கு முன் பந்தியை உண்டாக்குபவர், அவர் கலியாண விருந்தில் உண்டாகப்போகும் பந்தி எப்படியாய் இருக்கப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் மணமகள் மீது மணமகனுக்கு மிகவும் பேரானந்தம் காணப்படும். ‘என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு போனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே’ என்று உன் 2:4-லும், ‘இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்’ என்று உன் 2:8-லும் மணமகனின் பேரானந்தம் மணமகளின் மீது இருப்பதை நாம் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

தன்னை ஆயத்தப்படுத்தி மணவாட்டி என்னும் ஸ்தானத்தைப் பெறும் உங்கள் மீது இயேசுவின் பேரானந்தம் வெளிப்படும் நாள் தான் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்து. இந்தப்பூவுலகில் நீங்கள் இதுவரை கண்டிராத, காணமுடியாத கல்யாண விருந்தாக ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து காணப்போகிறது. அதற்கு மணவாட்டியாக நீங்கள் உங்களை ஆயத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *