பதினாலு தலைமுறைகள் (Fourteen Generations)

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும்,  பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் (மத்தேயு 1:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TWNXjiqqo9w

ஆபிரகாமிலிருந்து இயேசு வரைக்குமான சுமார் இரண்டாயிரம் வருடங்களை பதினாலு தலைமுறைகள் கொண்ட மூன்று தலைமுறை குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமிலிருந்து தாவீது வரைக்கும் சுமார் ஆயிரம் வருடங்கள் பதினாலு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப் போன காலம் வரைக்கும் சுமார் நானூறு வருடங்கள் பதினாலு தலைமுறைகளும், பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் சுமார் அறுநூறு வருடங்கள் பதினாலு தலைமுறைகளுமாய்க் காணப்படுகிறது. வேதத்தில் ஏழு என்பது பூரணத்தைக் குறிக்கிறது. பதினான்கு என்பது ஏழின் இருமடங்காய்க் காணப்படுவதினால் காலம் பூரணமாய் நிறைவேறின வேளையில் ஸ்திரீயின் வித்தாக இயேசு அவதரித்தார். காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார் என்று கலாத்தியர் 4:5ல் எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல, எபிரேயப் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் எண் மதிப்புக் காணப்படுகிறது. தாவீது என்ற பெயரின் எண் மதிப்பு பதினான்காய்க் காணப்படுகிறது. தாவீதின் ராஜா சனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்றும் அவன் சிங்காசனத்தில் வீற்றிருக்க எப்பொழுதும் ஒரு ராஜா காணப்படுவார் என்றும் வாக்குக் கொடுத்த தேவன் அதை இயேசுவின் மூலம் உண்மையாய் நிறைவேற்றினார்.

மத்தேயு 1:1-16 வசனங்களை வாசிக்கும் போது, நல்ல ராஜாக்களையும், நீதிக்குரிய ஜீவியம் செய்தவர்களையும், துன்மார்க்க ராஜாக்களையும், பாவத்தில் வாழ்ந்தவர்களையும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். கர்த்தரின் சிநேகிதனாகிய ஆபிரகாமைப் பற்றியும், தேவனுடைய இருதயத்திற்கேற்ற பாத்திரமாய் வாழ்ந்து அவருடைய சித்தத்தைச் செய்த தாவீதைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. உசியாவைப் போல நன்கு துவங்கி மேட்டிமையினால் குஷ்ட ரோகியாய் மாறி தோற்றுப் போன ராஜாவைப்பற்றியும், மனாசேயைப் போல துன்மார்க்கமாய் வாழ்ந்து தன் பிள்ளைகளைக் கூட தீக்கிரையாக்கிப் பலியிட்ட பொல்லாத ராஜாவைப்பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது ஆலயத்தை எடுத்துக் கட்டின சொரொபாபேல் என்ற செருபாபேலைப்பற்றியும், நீதிமானாகிய யோசேப்பைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. புறஜாதிகளாயும் பாவத்திலும் வாழ்ந்த தாமார், ராகாப், ரூத் மற்றும் பத்சேபாள் என்ற நான்கு ஸ்திரீகளைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் தலைமுறைகளின் பட்டியலில் கர்த்தருடைய கிருபையின் வெளிப்பாட்டைப் பார்க்கமுடியும். குறைபாடுகள் கொண்ட சாதாரண மனிதர்களையும் கூட தெரிந்தெடுத்து அவர்களுடைய வம்சத்தில் பிறப்பதற்குத் தன்னையும் இயேசு இணைத்தார் என்பது நாமும் அவருடைய வம்சத்தில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. அது ஆண்டவர் நம்மேல் கொண்ட அன்பையும் கிருபையையும் வெளிப்படுத்துகிறது. ஆகையால் ஆண்டவருடைய அன்பிற்கும் கிருபைக்கும் பாத்திரவான்களாய் வாழுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். 


கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *