எழுபது வாரங்கள் (70 Weeks)

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும் அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது (தானி. 9:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0ZqvcXpY4n4

தேவன், எல்லாவற்றையும் அவருடைய கால அட்டவணையின் படி செய்கிறவர். அவர் திட்டமிட்டபடியே ஒவ்வொரு காரியங்களும் பூமியில் நடக்கிறது. அவர் துவக்கத்தை முடிவிலிருந்தும், முடிவைத் துவக்கத்திலும் அறிகிற சர்வ வல்லமையுள்ள தேவன். ஆகையால் உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்காக முன்குறித்த காரியங்களை ஏற்றவேளையில் நேர்த்தியாய்ச் செய்வார். தானியேல் யூதாவின் குடிகளுடைய பாபிலோனியச் சிறையிருப்பு நிறைவேறித்தீர எழுபது வருடங்கள் செல்லும் என்பதை புஸ்தகங்களால் அறிந்து கொண்டான். அந்த வருடங்கள் நிறைவேறித்தீர்ந்த பின்பு எருசலேமிற்கு திரும்பிப் போவதைக் குறித்து அறியும் படிக்கு உபவாசித்து, பாவ அறிக்கைச் செய்து ஜெபித்தான். உடனே தேவன் காபிரியேல் தூதனை அனுப்பி அவனுடைய ஜனங்கள் மேலும் எருசலேம் பட்டணத்தின் மேலும் 70 வாரங்கள் கடந்து செல்லவேண்டும் என்பதைப் பற்றிய வேறொரு தரிசனத்தைக் கொடுத்தார். இயேசு தன்னுடைய ஆயிர வருட அரசாட்சியை நிறுவுதற்கு முன்பு என்ன சம்பவிக்கும் என்பதை எழுபது வாரங்களைக் குறித்த இந்தத் தீர்க்கதரிசனம் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

எழுபது வாரங்கள் என்பது 7 வாரமும், 62 வாரமும், 1 வாரமுமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  ஒரு வாரம் என்பது ஏழு வருடங்களைக் குறிக்கிறது. ஆகவே 7 வாரங்கள் என்பது 49 வருடங்களையும், 62 வாரங்கள் என்பது 434 வருடங்களையும், 1 வாரம் என்பது 7 வருடங்களையும் குறிக்கிறது, மொத்தமாக   490 வருடங்களைக் குறிக்கிறது. நெகேமியாவின் மூலம் எருசலேமின் அலங்கத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவதற்கான கட்டளை வெளிப்படுவது முதல் மேசியா இயேசு வருமட்டும் 7 வாரமும், 62 வாரமும் செல்லும், அதாவது 483 வருடங்கள் செல்லும் என்றும் அதன்பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார் என்று தானியேல் 9:25,26 கூறுகிறது. முன்னாள்களில் யூதர்களின் ஒரு ஆண்டு என்பது 360 நாட்களாய்க் காணப்பட்டது. ஆகையால் அவர்களுடைய 483 ஆண்டுகள் என்பது நம்முடைய கிரிகோரியன் நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியின்படி 476 வருடங்களாய் காணப்படுகிறது. 1 வருடத்திற்கு 365 நாட்களைக் கொண்ட நாம் பயன்படுத்துகிற நாட்காட்டியின்படி கிறிஸ்துவுக்கு பின்பு 33ம் ஆண்டில் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு எருசலேமுக்குள் நுழைந்த அந்த நாளாகக் காணப்படுகிறது. எழுத்தின்படியே அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறினது. 70 வாரங்களில் 69 வாரங்கள் ஏற்கனவே நிறைவேறி விட்டது. கடைசி 1 வாரமாகிய 7 வருடங்கள் என்பது அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியின் நாட்களாய்க் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, நாமெல்லாரும் 69வது வாரத்திற்கும் 70வது வாரத்திற்கும் இடைப்பட்ட நீண்ட கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் கிருபையின் நாட்கள் முடிவடைவதற்குள்ளாய் மனந்திரும்பி, இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு பரிசுத்தமான ஜீவியம் செய்யுங்கள். நற்கிரியைகளில் அனுதினமும் பெருகுங்கள். எல்லாவற்றையும் தன் கால அட்டவணையின்படி செய்கிற இயேசு நம்மை சேர்த்துக்கொள்ளும் படிக்குத் துரிதமாய் மத்தியாவானில் வரப்போகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *