தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது. லூக்கா 2:31,32.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/W-sXP82DcGo
பிதாவாகிய தேவன் தன் ஒரே பேரான குமாரனாகிய இயேசுவை, இந்தப் பூமியில் உலக இரட்சகராக அனுப்பினார். அவருடைய பிறப்பைக் குறித்து முன்னறிவித்த தூதர்களும் அவரை ரட்சகராகவே வெளிப்படுத்தினர். இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே நான் வந்தேன் என்று இயேசுவும் கூறினார். ஆகையால் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவப்பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு வாழ, இந்தப் பண்டிகைக் காலங்களில் உங்களை முழுவதுமாய் அர்ப்பணியுங்கள்.
மேற்குறிப்பிட்ட வசனம் சிமியோன் என்ற வயோதிபத் தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகளாய் காணப்படுகிறது. சிமியோன் நீதியும் தேவபக்தியும் உள்ளவராயும் இஸ்ரவேலின் ஆறுதல்வர காத்திருக்கிறவராயும் இருந்தார்; பரிசுத்தஆவியாவனவர் அவரோடு இருந்தார். கிறிஸ்துவைக் காண்பதற்கு முன்பாக அவர் மரிப்பதில்லை என்று அவருக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் அந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்காகக் காத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஆவலோடு மேசியாவை காண்பதற்காகத் தேவாலயத்திற்கு வருவார். ஒருநாள் வழக்கத்தின்படி தேவாலயத்திற்கு வந்திருந்தவேளையில் இயேசுவாகிய பாலகனை மோசேயின் பிரமாணத்தின்படி விருத்தசேதனம் பண்ணுவதற்காக மரியாளும் யோசேப்பும் தேவாலயத்திற்குக் கொண்டுவந்திருந்தார்கள். அந்த வேளையில் இயேசுவாகிய பாலகனைக் கையில் ஏந்தி ஆவியினால் ஏவப்பட்டு உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்று அறிக்கையிட்டான். உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே மரிக்க அனுமதிக்கிறீர் என்றும் சொன்னான்.
இயேசுவே சகல ஜனங்களுக்கும் பிதாவாகிய தேவனால் ஆயத்தம் பண்ணின இரட்சண்யம். அவர் ஒருவரே ஜனங்களைப் பாவங்களிலிருந்து விலக்கி இரட்சிக்கிறவர். இயேசு என்ற பெயரின் அர்த்தம் இரட்சகர் என்பதாகக் காணப்படுகிறது. பூமியில் தோன்றின ஒருவர்கூட கிறிஸ்துவை இரட்சகராகக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவர்களுடைய மரணம் சமாதானத்தோடு இருப்பதில்லை. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் நாம் இரட்சிக்கப்படுவதற்கு இயேசு என்ற நாமத்தைத் தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற நம்பிக்கைகள் உங்களை இரட்சிப்பதில்லை. புண்ணியஸ்தலங்களுக்குக் கடந்து செல்லுவதால் இரட்சிப்பைப் பெற்றுவிடமுடியாது. நம்முடைய நற்கிரியைகள் நமக்கு இரட்சிப்பை அளிக்கமுடியாது. ஆகையால் இயேசுவாகிய இரட்சண்யத்தை நம்முடைய கண்கள் கண்டு அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும். காலதாமதம் செய்யாதபடி உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு அவர் இலவசமாய் அருளுகிற இரட்சிப்பைச் சுதந்தரியுங்கள் அப்போது மரணம் கூட உங்களுக்குச் சமாதானமாய் காணப்படும்.
1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளையில் ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல் என்ற பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. உல்லாசமாய் பொழுதைக்கழித்துக் கொண்டிருந்த அனேகர் மரித்துப்போனார்கள். அந்தக் கப்பலில் ஜான் ஹார்ப்பர் என்ற தேவ மனிதனும் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு ஓர் உயிர் மீட்சி மேற்சட்டை கிடைத்தது. அவர் அதன் மூலம் தன் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அந்த வேளையிலும் தன் ஊழியத்தைக் கைவிடவில்லை. தான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் ஆகையால் மரித்தாலும் சமாதானத்தோடு ஆண்டவரிடம் சென்றுவிடுவேன் என்பதை அறிந்திருந்தார். ஆனால் திரளான ஜனங்கள் மரணபயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறினார். அவர் அருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்தான். அவனிடம் ஜான் ஹார்ப்பர் நீ இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்டாயா? ஆண்டவரோடு ஒப்புரவாகிவிட்டாயா? என்று கேட்டார். அவன் இல்லை என்றான். உடனே தன் உயிர் மீட்சி மேற்சட்டையை அவனிடம் வீசினார்; தன்னைக்குறித்துக் கவலைப்படவில்லை. தண்ணீரில் மூழ்கினாலும் பரலோகத்தில் ஆண்டவரோடு இருப்பேன் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டது. சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கி இறந்துவிட்டார். ஆனால் அக்கியுலா வெப் என்ற இளைஞன் தப்பிப்பிழைத்தான். இயேசுவை இரட்சகராகக் கண்டுகொண்டான். நான் தான் ஜான் ஹார்ப்பருடைய ஊழியத்தால் சந்திக்கப்பட்ட கடைசி ஆத்துமா என்று எங்கும் சாட்சி பகர்ந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே இப்படிப்பட்ட கடைசி தருணத்திற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயேசுவை இன்றே சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். நித்தியத்தைச் சமாதானத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

