மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத். 16:18)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9u0lnk-Pv48
இயேசு, சபையைக் குறித்துக் கூறும் போது என் சபை என்று உரிமை பாராட்டிக் கூறவதை மேற்குறிப்பிட்ட வசனத்தில் பார்க்கமுடிகிறது. சபையை இரத்தம் சிந்தி கிரயத்திற்குக் கொண்டவரும், அதைக் கட்டுகிறவரும், அதன் அஸ்திபாரமும் அவரே. ஆகையால் சபை ஒரு தனி மனிதனுக்கோ, மதப்பிரிவுகளுக்கோ, நிறுவனங்களுக்கோ உரியதல்ல. சபையின் செயல்பாடுகளைப் போதகர்கள், மேய்ப்பர்கள், மூப்பர்கள் கண்காணிக்கிறார்களே ஒழியச் சபை முழுவதும் ஆண்டவருக்குரியதாய் காணப்படுகிறது.
சபை என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் முதல்முதலாக மேற்குறிப்பிட்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எக்லேசியா (Ekklesia) என்ற கிரேக்க வார்த்தைக்கு அழைக்கப்பட்டவர்களின் கூட்டம் (Called-out ones) என்று அர்த்தம். இது ஒரு மதச்சார்பான சொல் அல்ல, தம்மைப் பின்பற்றுகிற சீஷர்களைக் குறித்து இயேசு கூறும் போது, மதசம்பத்தப்படாத சொல்லையே ஆண்டவர் தெரிந்தெடுத்தார். ஆகையால்தான் கிறிஸ்தவம் என்பது ஒரு மதமல்ல, மார்க்கமாய் காணப்படுகிறது, அதாவது இயேசுவை பின்பற்றி அவர் விட்டுச்சென்ற வழியைப் பின்பற்றுகிற கூட்டமாகும். அவர்கள் எந்தத் தேசத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்பட்டாலும், எந்த இன, மொழியைச் சார்ந்தவர்களாய் காணப்பட்டாலும் சபை அழைக்கப்பட்ட எல்லோரையும் ஐக்கியப்படுத்துகிற இடமாய் காணப்படுகிறது. ஆகையால் சபையில் பிரிவினைகளுக்கு இடமில்லை, பட்சபாதங்களுக்கு இடமில்லை, எல்லோரும் இயேசுவின் பிள்ளைகள் என்ற உணர்வோடு நாம் கூடிவருகிற இடமாய் சபை காணப்படுகிறது.
இயேசு, இப்பூமியில் காணப்பட்ட நாட்களில் ஜெப ஆலயங்களுக்குச் செல்லுவதை வழக்கமாய் கொண்டிருந்தார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார் என்று லூக்கா 4:16 கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் அதை வழக்கமாய் கொண்டிருந்தார், அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள், அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது, பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்தான் என்று அப். 17:1,2 கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசுவைப் போலச் சபைக்குச் செல்லுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இயேசு என் சபை என்று உரிமைபாராட்டினதைப் போல, அவர் உங்களுக்கு என்று கொடுத்திருக்கிற சபைகளுக்கு உரிமையோடு சென்று உன்னதமான தேவனை எல்லோரோடும் இணைந்து சேவியுங்கள். உங்களால் இயன்ற ஊழியங்களைச் செய்து சபையைக் கட்டுங்கள். அப்போது கர்த்தர், உன்னதங்களுக்குரிய, பூமிக்குரிய, சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களைத் தந்து உங்கள் வாழ்க்கையைக் கட்டுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

